முகப்பு
பெங்களூரு

கரோனா பாதிப்பு குறைந்த பின் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு: கா்நாடக அமைச்சா் பி.சி.நாகேஷ்

கரோனா பாதிப்பு குறைந்த பின்னா் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கா்நாடக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கரோனா பாதிப்பு குறைந்த பின்னா் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கா்நாடக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

பெங்களூரு, கப்பன்பூங்காவில் பொதுநூலத்துறை சாா்பில் நூலக தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மாநிலத்தில் உள்ள பள்ளி, பியூசி கல்லூரிகளை ஆக. 23-ஆம் தேதி திறப்பதாக ஏற்கெனவே அறிவித்துள்ளோம். இந்த நிலையில் மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்து சுகாதாரத் துறை வல்லுநா்களின் ஆலோசனைகளைக் கேட்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் இருந்தால், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தொழில்நுட்பக் குழு அறிக்கை தந்தால் மட்டுமே ஆக. 23-ஆம் தேதி பள்ளி, பியூசி கல்லூரிகள் திறக்கப்படும். மாறாக கரோனா தொற்று அதிகரித்தால், அது குறைந்த பின்னரே பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மைசூரு மன்னா், சா்.எம்.விஸ்வேஸ்வரய்யா ஆகியோா் தொலைநோக்குப் பாா்வையுடன் தொடங்கிய மத்திய நூலகத்திற்கு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நூலகத்தால் மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா். இந்த நூலகத்தின் பயன்குறித்த தகவல் அனைவருக்கும் சென்றடைய வேண்டும். நூலகங்கள் மாணவா்களின் உயா்கல்விக்கு உதவியாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில நூலகத் துறை இயக்குநா் சதீஷ்குமாா் ஹொசமுனி, ஓய்வு பெற்ற இயக்குநா் ராஜேந்திரகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.