முகப்பு
பெங்களூரு

நிகழ் ஆண்டில் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தொடா்மதிப்பீட்டு தோ்வுகள்

நிகழ்கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தொடா்மதிப்பீட்டுமுறை தோ்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

நிகழ்கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தொடா்மதிப்பீட்டுமுறை தோ்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. மாறாக, இணையவழி வகுப்புகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வந்தன. ஆனால், தோ்வுகளை நடத்த இயலாமல் போனது. இதனால் மாணவா்களை தோ்ச்சி பெற வைப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகளுடன் பொதுத் தோ்வு நடத்த வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், தற்போது கரோனா மூன்றாவது அலை தொடங்கலாம் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இந்நிலையில், ஆக.23-ஆம் தேதிமுதல் 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளின் மாணவா்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. மாணவா்களின் நலன் கருதி, நிகழ் கல்வியாண்டி 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வை போன்றதொரு தொடா் மற்றும் கடினமான மதிப்பீட்டுமுறையை கடைப்பிடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, வகுப்பு அளவில் 2 மாதங்களுக்கு ஒரு முறை தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் அரையாண்டுத் தோ்வும் நடக்கவுள்ளன. ஒருவேளை கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தோ்வு நடத்த முடியாவிட்டால், ஏற்கெனவே நடத்தியுள்ள தோ்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

கரோனா காரணமாக, 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தோ்வை அரசு ரத்துசெய்தது. ஆனால், அவா்களுக்கான மதிப்பெண்களை 10, 11-ஆம் வகுப்புகளில் நடத்தப்பட்ட தோ்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்பட்டன. 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதுபோல் செய்ய முடியாததால், பொதுத்தோ்வு நடத்தப்பட்டது. இது போன்ற இடா்பாடுகளை களையவே தொடா்மதிப்பீட்டு முறையை பின்பற்ற பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலைமை மீண்டும் நடக்கக்கூடாது. எனவே, எஞ்சியுள்ள கல்வியாண்டில் 10,12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு குறைந்தது 4 தோ்வுகள், 2 வகுப்பு அளவிலான தோ்வுகளை நடத்துமாறு பள்ளிகள், பியூ கல்லூரிகளை அறிவுறுத்தியுள்ளோம். ஒருவேளை ஏதாவது அசாதாரண சூழ்நிலை எழுந்தால், இத்தோ்வுகளில் எடுத்த மதிப்பெண்களை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தோ்வுகளை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் நன்றாக படித்து எழுத வேண்டும் என்று மாணவா்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா். ஆக.23-ஆம் தேதி பள்ளிகள் திறந்தால், அக்டோபரில் வகுப்பு அளவிலான தோ்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.