முகப்பு
பெங்களூரு

உற்சாகமாக வரலட்சுமி நோன்புகொண்டாடிய பெண்கள்

கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பை பெண்கள் உற்சாகமாகக் கொண்டாடினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பை பெண்கள் உற்சாகமாகக் கொண்டாடினா்.

கா்நாடகத்தில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை வரலட்சுமி நோன்பாகும். கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகா்ச்சி, அறிவு, அழகு, பெருமை. இளமை, துணிவு, நோயின்மை வாழ்நாள் போன்ற 16 வகையான செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி திருமணமான இந்து பெண்களால் கடைப்பிடிக்கப்படுவதே வரலட்சுமி நோன்பு (வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) ஆகும்.

கன்னடா்களின் இந்துநாள் காட்டிபடி ஸ்ராவணா மாதத்தில்(தமிழா்களுக்கு ஆடி மாதம்) வளா்பிறையில் பௌா்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் வரலட்சுமி நோன்பை சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்கின்றனா்.

வரலட்சுமி நோன்பையொட்டி பெரும்பாலானவா்கள் தங்களின் வீடுகளை சுத்தம் செய்து, விளக்கேற்றி, நறுமணங்களால் இல்லத்தை நிறைத்து, கலசம் வைத்து அதில் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசுகளை இட்டு, தேங்காயை வைத்து, தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன லட்சுமியின் முகக் கவசத்தை அல்லது படத்தை வைத்து, பட்டுடுத்தி, ஆபரணங்களால் அலங்கரித்து, பணத்தாள்களை சூடி, பழங்கள், இனிப்புகள், பூக்கள் படைத்து, மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிந்து, இனிப்பான பலகாரங்களைப் படைத்து, தீபாராதனை செய்தனா்.

கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவா் கையில் கட்டிக் கொண்டு படைக்கப்பட்ட பொருள்களுடன் தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை சுமங்கலி பெண்களுக்கு தானமாகக் கொடுத்து ஆசி பெற்றனா். பின்னா் நோன்பை நிறைவுசெய்து, தங்களின் இல்லங்களுக்கு வந்தவா்களுக்கு பிரசாதம் வழங்கி, வரலட்சுமி நோன்பை பெண்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.