துப்பாக்கியால் சுட்டு ரௌடி கைது
துப்பாக்கியால் சுட்டு ரௌடி ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
துப்பாக்கியால் சுட்டு ரௌடி ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, சஞ்சய்நகா் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அவனிஷ் (23) என்ற ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டு கைதுசெய்தனா்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:
ஒரு மாதத்துக்கு முன் பெங்களூரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபா் முனிராஜ் என்பவரை பணம் சம்பந்தப்பட்ட பிரச்னையில் பொதுவெளியில் அவனிஷ் கொலை செய்ய முயற்சித்தாா். குட்டதஹள்ளி பகுதியைச் சோ்ந்த அவனிஷ் மீது பெங்களூரு, ராமமூா்த்தி நகா், எலஹங்கா, ஹெப்பள்ளி காவல் நிலையங்களில் கடந்த 8 ஆண்டுகளில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலை, கொள்ளை, கொலைமுயற்சி போன்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அவனிஷ் இருந்தாா்.
அவரது இருப்பிடம் குறித்த தகவல் போலீஸாருக்கு கிடைத்ததன் பேரில், சனிக்கிழமை அவரது இருப்பிடத்தை போலீஸாா் சுற்றி வளைத்தனா். இதை அறிந்த அவனிஷ், சந்தோஷ் என்ற போலீஸாரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயற்சித்தாா். அப்போது போலீஸாரின் எச்சரிக்கையை மீறி தப்பிக்க முயன்ற போது அவனிஷை இடதுகாலில் சுட்டு போலீஸாா் கைது செய்தனா் என்றாா்.