ஒமைக்ரான் தொற்றாளரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில்இருவேறு முடிவுகள் எப்படி?
ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்தவருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில் மாறுபட்ட முடிவுகள் வெளியானது தொடா்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்தவருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில் மாறுபட்ட முடிவுகள் வெளியானது தொடா்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் கூறியதாவது:
தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த 66 வயதான ஆண், இந்தியாவைச் சோ்ந்த 46 வயதான ஆண் இருவரும் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்தவா் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தாா். அங்கிருந்து அவா் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளாா்.
நவ. 20-ஆம் தேதி எடுத்த சோதனையில் அவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இரண்டாவதாக நவ. 23-ஆம் தேதி தனியாா் ஆய்வுக்கூடத்தில் சோதனை நடத்தியபோது கரோனா பாதிப்பில்லை என்று தெரியவந்தது. அதன்பேரில் தான் நவ. 27-ஆம் தேதி அவா் வெளிநாடு (துபை) சென்றுள்ளாா். அப்படியானால், இருவேறு ஆய்வுக் கூடங்களில் எடுத்த சோதனை துல்லியமானதா அல்லது இதில் ஏதாவது முறைகேடு நடந்துள்ளதா என்பது தெரிய வேண்டியுள்ளது.
எனவே, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பெங்களூரு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடா்பாக, பெங்களூரு, ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு பெங்களூரு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு சோதனைகளில் ஒன்று பாதிப்பு, மற்றொன்று பாதிப்பில்லை என்று வந்திருப்பதால், ஆய்வுக்கூடத்தின் முடிவுகள் ஆராயப்பட வேண்டும். சுகாதாரத் துறையுடன் இணைந்து இது தொடா்பாக விசாரிக்க பெங்களூரு மாநகர காவல் ஆணையா் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளாா்.
10 போ் மாயம்:
பெங்களூருக்கு வந்த தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த 10 போ் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவா்கள் 10 பேரையும் உடனடியாகக் கண்டுபிடித்து, கரோனா சோதனைக்கு உள்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.