FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

மச்சிலி...

கிரீடம் சூட்டிக் கொண்டு இந்திய வனங்களை ஆட்சி செய்த பேரரசி, 'மச்சிலி' எனும் புலி. இதன் இடது கன்னத்தில் இருந்த மீன் போன்ற மச்சத்தால், 'டி16 புலி மச்சிலி' என்ற பெயரிடப்பட்டது.

Updated On : 22 மார்ச் 2026, 4:08 am IST
பகிர்:

கிரீடம் சூட்டிக் கொண்டு இந்திய வனங்களை ஆட்சி செய்த பேரரசி, 'மச்சிலி' எனும் புலி. இதன் இடது கன்னத்தில் இருந்த மீன் போன்ற மச்சத்தால், 'டி16 புலி மச்சிலி' என்ற பெயரிடப்பட்டது. 2000-களின் தொடக்கத்தில் மூன்று வயதான மச்சிலி, ரந்தம்பூர் தேசியப் பூங்காவின் அடையாளமாக மாறியது. காலையில் இளம் வெயிலில் சிதிலமடைந்த கோட்டையின் முகப்பில் அது அமர்ந்திருக்கும் அழகே அலாதி. சில நேரங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மச்சிலியின் பிம்பம் சலனமற்றிருக்கும் ஏரியில் ஏற்படுத்தும் பிரதிபலிப்பு, சில வேளைகளில் கோட்டை உள்புறத்தில் நடை போடும் கம்பீரம்...

இவைதான் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. ஏறக்குறைய 392 சதுர கி.மீ. பரப்பை அவள் தனது ஆளுகையின் கீழ் வைத்திருந்தாலும், பார்வையாளர்களை எப்போதும் பயமுறுத்தியதில்லை. தனது குட்டிகளோடு ரந்தம்பூர் பூங்காவை வலம் வந்த கம்பீரத்தை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. உலகின் சிறந்த புகைப்பட நிபுணர்களோ மச்சிலியை படம் எடுக்க ஓடி வந்தனர். சிலர் மாதக் கணக்கில் தங்கிப் படம் பிடித்தனர். உலகிலேயே அதிக புகைப்படங்கள் எடுக்கப்பட்ட புலி என்றால், அது 'மச்சிலி'தான்.

சுற்றுச்சூழலை மட்டுமல்ல; ஆண்டுக்கு பத்து மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை மச்சிலி ஈட்டித் தந்து, பொருளாதாரத்தையும் நிலைநிறுத்தினாள். தோல்வி இல்லாத மச்சிலி, தனது சொந்த மகளால் தோற்கடிக்கப்பட்டபோது, ரந்தம்பூர் தனது பிரியமான ரஜபுத்ர ராணியை இழந்தது.

Advertisement

Advertisement

ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் தேசியப் பூங்காவில் பிறந்த மூன்று பெண் குட்டிகளில் மச்சிலி கடைக்குட்டி. பெரும்பாலும் புலிகள் இரண்டு குட்டிகள் போடும். மூன்றாவது குட்டி பலவீனமாக இருப்பதுடன் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் குறைவு. மச்சிலியின் ஆரம்ப நாள்கள் வெகு சாதாரணமானவையாகும். தாய் வேட்டையாடிய உணவை உண்பது, சகோதரிகளுடன் விளையாடுவது, செல்லமாகச் சண்டை போடுவது, உறக்கத்தில் இருக்கும் தாயைச் சீண்டுவது போன்றவையாகும்.

இரண்டு ஆண்டுகள் தாயின் பராமரிப்புக்குப் பின்னர் மச்சிலியின் வாழ்க்கை மாறத் தொடங்கியது. இரண்டு வயதானபோதே மச்சிலி தனியாக வேட்டையாட ஆரம்பித்தது. அதனுடைய கூர்மையான பார்வை, இரையை பின்தொடர்ந்து தாக்கும் லாகவம், அதீத வேகம், எதிராளியின் மீதான தாக்குதல் என்று எல்லாவற்றிலும் தன்னை உன்னதமாக மாற்றிக் கொண்டது.

அழிவில் இருந்து மீட்டது

ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வனங்கள் மிகப் பெரிய துயரத்தைச் சந்தித்தது. நாட்டுக்கே உரித்தான வங்கப் புலி இனம் அழிவின் விளிம்பில் இருந்தது. கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் லட்சக்கணக்கான புலிகள் கொன்று குவிக்கப்பட்டன. புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது மச்சிலி, தன் இனத்தை அழிவிலிருந்து மீட்டாள். இதனால் ரந்தம்பூர் தேசியப் பூங்காவில் 2004-இல் 15 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2014-இல் 50 ஆனது.

'உணவுச் சங்கிலியில் புலிகள் உச்ச நிலையில் இருக்கும் வேட்டையாடி' என்றாலும், புலிகளுக்கான இரை சுலபத்தில் கிடைத்து விடுவதில்லை. மானோ, காட்டுப் பன்றியோ, அவை உயிருக்காக ஓடும் வேகம், உணவுக்கான வேகத்தைவிட அதிகம்.

அண்மைக்கால தரவுகளின்படி, புலிகளின் வேட்டையாடுதலில் 60 சதவீதம்தான் வெற்றி பெறுகின்றன. இன்னமும் பல வங்கப் புலிகள்,பசியோடு திரிகின்ற பரிதாபமும், சில புலிகள் உணவுக்காக பல மைல்கள் பயணிக்கின்ற அவலமும் நேர்கின்றன. மச்சிலியின் வேட்டையாடும் வேகத்தைவிட இரையை தீர்மானிக்கும் துல்லியம் அதிசயத்தக்கதாகும். மனதின் விருப்பத்தை, மூளை உள் வாங்கிக் கொண்டு, அதனை உடல் செயல்படுத்துவது என்பது ஒரு ராக்கெட் தொழில்நுட்பம் மாதிரியானதாகும்.

14 அடி முதலையை வீழ்த்தியது

2003 ஜூன் மாதத்தில் கோடை நீருக்கான தேடுதலில் மச்சிலி நதியை அடைந்தபோது, 14 அடி முதலையிடம் மாட்டிக் கொண்டது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் முதலையைக் கொன்றது மச்சிலி. யார் யாரை முதலில் தாக்கியது என்பது தெரியாவிட்டாலும், வனக் காவலர்கள், வரும்போது அந்த ராட்சத முதலையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது மச்சிலி. இதனால் மச்சிலி தனது இரு கோரைப் பற்களை இழந்து விட்டது. அவை இல்லாமலே இறுதி வரை அபாரமாக வேட்டையாடி, இரையை உண்டது.

தாயை வீழ்த்திய மகள்

மச்சிலியின் செல்லப் பெண் சுந்தரி, தனது தாயைப் போல் அதீத அழகி. தேர்ந்த வேட்டைக்காரி. தாயிடம் இல்லாத ஒன்றான கோபம், சுந்தரிக்கு இருந்தது. தொடக்கத்தில் இருவருக்கும் சிறுசண்டைகள். ஒரு மழைநாளில் வெகு நேரம் சண்டை நீடித்தது. உக்கிரமான போரில் யாரும் தோற்கவுமில்லை. யாரும் வெல்லவும் இல்லை.

அடுத்த சில நிமிடங்களில், தனது மகளிடம், தனது ராஜ்ஜியத்தை விட்டுக் கொடுத்து விட்டு வெளியேறினாள். மச்சிலி தோல்வியைச் சந்தித்த ஒரே இடம் இதுதான்.

மச்சிலியின் இறுதி நாள்களைப் பதிவு செய்த புகைப்பட நிபுணர்களோ, 'ஒரு முழுமையான நிறைவான வாழ்க்கையாக மச்சிலியின் வாழ்க்கை இருந்தது. தோல்வியை அறியாத அவளிடம்,ஒரு தெளிவும் நம்பிக்கையும் தெரிந்தது. மச்சிலி உற்சாகத்தின் பிறப்பிடமாக, நம்பிக்கையின் மையமாக இருந்தாள்' என்றாள்.

ஏறக்குறைய 19 ஆண்டுகள் வாழ்ந்த மச்சிலியின், கடைசி சில மாதங்கள் முதுமையால் பார்வை இழப்பு, பலவீனம் இருந்தாலும் தனது உணவை வேட்டையாடியே உண்டாள். மச்சிலி பிறந்தபோது யாரும் கொண்டாடவில்லை. ஆனால், இறந்தபோது உலகமே துக்கம் அனுஷ்டித்தது. அரசு மரியாதைகளுடன் ஹிந்து முறைப்படி எரிக்கப்பட்டாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments