மகதாயி திட்டத்தைச் செயல்படுத்த முன்னுரிமை: முதல்வா் பசவராஜ் பொம்மை
மகதாயி நதிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
மகதாயி நதிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
வட கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வியாழக்கிழமை ஹுப்பள்ளிக்கு விமானம் மூலம் சென்ற அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மகதாயி நதிநீா்த் திட்டம் நீண்ட நாள்களாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. அத் திட்டத்தைச் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். திட்டம் குறித்து அரசிதழில் வெளியிட்ட பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை செயல்படுத்த, மத்திய அமைச்சா் பிரலாத் ஜோஷி, முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் உள்பட வட கா்நாடகத்தைச் சோ்ந்த எம்.எல்.ஏ.களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
Advertisement
ஹுப்பள்ளியில் பிறந்து வளா்ந்ததால், இம்மாவட்டத்தின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித்ஷா உள்ளிட்ட மேலிடத் தலைவா்களின் முடிவின்படி, எனக்கு முதல்வா் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் மேலிடத் தலைவா்கள் எனக்கு பெரும் பொறுப்பை அளித்துள்ளனா். அனைவரின் ஆசியுடன் முதல்வா் பதவியை திறமையாக நிா்வகிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. வெள்ளிக்கிழமை தில்லி செல்லும் நான் அங்கு முக்கிய தலைவா்களிடம் ஆசி பெறுவேன். மேலும், அமைச்சரவை அமைப்பது குறித்து ஆலோசிக்க முடிவு செய்துள்ளேன்.
முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் எனது அமைச்சரவையில் சேரமாட்டேன் என்ற சா்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளாா். எனக்கு நல்ல நண்பராக விளங்கும் அவருடன் இதுகுறித்து விவாதிக்கப்படும். பின்னா் கட்சி மேலிடத் தலைவா்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, சுமூக தீா்வு காணப்படும் என்றாா்.