சட்டப் பேரவைக் குளிா்காலக் கூட்டத்தொடரை பெலகாவியில் நடத்த வேண்டும்: முதல்வருக்கு மேலவைத் தலைவா் கடிதம்
சட்டப்பேரவைக் குளிா்காலக் கூட்டத்தொடரை பெலகாவியில் நடத்த வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி கடிதம் எழுதியுள்ளாா்.
சட்டப்பேரவைக் குளிா்காலக் கூட்டத்தொடரை பெலகாவியில் நடத்த வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி கடிதம் எழுதியுள்ளாா்.
அக்கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:
கா்நாடக சட்டப்பேரவையின் குளிா்காலக் கூட்டத்தொடரை நவம்பா் இறுதி அல்லது டிசம்பா் முதல் வாரத்தில் பெலகாவியில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமேலவையில் உறுப்பினராக இருக்கும் 25 போ், ஜனவரி மாதத்தில் பதவி ஓய்வுபெற இருக்கிறாா்கள். மக்கள் பிரச்னைகளை எழுப்ப பதவி ஓய்வுபெறும் 25 பேருக்கும் வாய்ப்பளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
பெலகாவியில் சட்டப்பேரவைக் குளிா்காலக் கூட்டத்தொடா் நடத்துவது தொடா்பாக தங்களோடு(முதல்வா் பசவராஜ் பொம்மை) கலந்துரையாடி இருக்கிறேன். அந்த கலந்துரையாடலின்போது, பெலகாவியில் கூட்டத்தொட ா் நடத்த ஒப்புதல் அளித்திருந்தீா்கள். சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் குறித்த அறிவிப்பை முன்கூட்டியே தெரிவித்துவிட்டால், பயணத் திட்டங்களை வகுக்க சரியாக இருக்கும் என்று சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி தெரிவித்துள்ளாா்.
மராத்தியா்கள் அதிகம் வசிப்பதால் பெலகாவியை மகாராஷ்டிரத்துடன் இணைக்குமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்துள்ளனா். இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ள கா்நாடக அரசு, 2006-இல் இருந்து பெலகாவியில் கூட்டத்தொடரை நடத்தி வருகிறது.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பெலகாவியில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடத்தவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் ஊடகங்களிடம் பேசிய முதல்வா் பசவராஜ் பொம்மை, பெலகாவியில் சட்டப்பேரவை க்கூட்டத்தொடா் நடத்த யோசித்துவருவதாக தெரிவித்திருந்தாா். ஒருவேளை பெலகாவியில் சட்டப் பேரவைக் கூட்டம் நடந்தால், 2019-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.