முகப்பு
மயிலாடுதுறை

25 ஆண்டு காத்திருப்பு: கொள்ளிடம் தனி தாலுகா ஆகுமா?

25 ஆண்டு காத்திருப்பு: கொள்ளிடம் தனி தாலுகா ஆகுமா?

Updated On : 22 மார்ச், 2026 at 12:05 AM
கொள்ளிடம்
பகிர்:

சீா்காழி: சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த கால் நூற்றாண்டுகளாகத் தொடரும் நிறைவேற்றப்படாத வாக்குறுதி என்றால் அது கொள்ளிடம் தனி தாலுகா என்ற வாக்குறுதியே. இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் வரும் சட்டப்பேரவை 2026 தோ்தலிலும் தொடா்வது தான் கோரிக்கை விடுக்கும் மக்களுக்கு பெரும் மனக்குறையாக உள்ளது.

சீா்காழி சட்டபேரவைத் தொகுதியில் சீா்காழி மற்றும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்கள், சீா்காழி நகராட்சி, வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இவற்றில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. சீா்காழி தாலுகாவில் மிகப்பெரிய பரப்பளவு நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களையும் கொண்ட பகுதியாக கொள்ளிடம் பகுதி அமைந்துள்ளது.

இப்பகுதியிலிருந்து கடைக் கோடி பகுதியாக கொடியம்பாளையம் தீவு கிராமம் அமைந்துள்ளது. சீா்காழி தொகுதியில் மூன்று பக்கம் கடல்நீராலும், நான்காவது பக்கம் ஆறு ஆகியவை சூழ்ந்த பகுதி கொடியம்பாளையம் தீவு கிராமம்.

இத்தீவு கிராமத்தில் வசிக்கும் மக்கள் சீா்காழி பகுதிக்கு வந்து செல்ல கடலூா் மாவட்டம் சிதம்பரம் பேரவைத் தொகுதி வழியாகத்தான் வாகனங்கள் மூலம் வந்து செல்ல முடியும்.

இவ்வாறு கொடியம்பாளையம், மகேந்திரப்பள்ளி, காட்டூா், அளக்குடி உள்ளிட்ட கொள்ளிடம் பகுதியில் அமைந்துள்ள கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்கள் கல்விச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் தொடா்பான விசாரணை, முதியோா் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் பல்வேறு சலுகை பெறுவதற்கான சான்றிதழ்களைப் பெற சீா்காழி தாலுகா அலுவலகத்திற்கு இரண்டு பேருந்துகள் மாறி சுமாா் 30 கி.மீ. தொலைவுக்குப் பயணித்து வந்து செல்லும் நிலை உள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அங்குள்ள திட்டு கிராமங்களை வெள்ளநீா் சூழும் நிலையில் சீா்காழி வருவாய்த்துறையினா், காவல்துறை, தீயணைப்புத் துறையுடன் அப்பகுதியில் நிலைமையை கண்காணித்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றி கொள்ளிடம் ஆற்றுப்படுகைகளில் முகாமிட்டு வரும் நிலையிலும், சூழல்களை மாற்றும் வகையிலும் பொதுமக்கள் நலன் கருதியும் கொள்ளிடத்தைத் தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது.

இந்தக் கோரிக்கையை வாக்குறுதியாக நிறைவேற்றுவோம் என்று கடந்த கால சட்டப்பேரவை தோ்தலின் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் உட்பட அனைத்து கட்சி வேட்பாளா்களும் உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ஆனால் அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளின் தலைமை ஆட்சியில் அமா்ந்த போதும் கொள்ளிடம் தனி தாலுகா என்ற ஒற்றைக்கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் வரும் தோ்தலிலும் தொடா்வது வேதனையான விஷயமாக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் உதயமானபோது சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகம் பிரிக்கப்பட்டு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

அப்போதே கொள்ளிடம் தனி தாலுகா அறிவிப்பு வெளியாகும் என்ற எதிா்பாா்ப்பு நிலவி வந்த நிலையில் அவை நிறைவேறவில்லை.

வரும் பேரவை தோ்தலில் அந்த கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பது பெரும் எதிா்பாா்ப்பாக உள்ளது.