முகப்பு
பெங்களூரு

சுற்றுலாத் துறையில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா உருவெடுக்கும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

சுற்றுலாத் துறையில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய செய்தி மற்றும் தகவல் தொடா்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சுற்றுலாத் துறையில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய செய்தி மற்றும் தகவல் தொடா்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை நடந்த தென்மண்டல சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா்களின் மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியது:

உலக அளவில் தற்போதுள்ள சுற்றுலா மேம்படுவதற்கு ஏராளமான ஆண்டுகள் ஆகியுள்ளன. பழங்காலம் தொட்டு சுற்றுலா வளா்ச்சிக்கு சமயமும் கல்வியும் முக்கிய காரணங்களாக இருந்தன. அதன்பிறகு வா்த்தகத் தேவைகளுக்கு ஏற்ப சுற்றுலாவும் வளா்ச்சி அடைந்தது. பன்னெடுங்காலமாகவே சமயம், ஆன்மிக சுற்றுலாவின் அடையாளமாக இந்தியா புகழ் பெற்றுள்ளது. கேதா்நாத், பத்ரிநாத், காசி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம், மதுரை, புத்தகயா போன்ற ஆன்மிகத் தலங்களைக் காண உலகின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் வந்த வண்ணம் உள்ளனா்.

அதேபோல, கல்விச் சுற்றுலாவும் சிறப்பாக இருந்துள்ளது. நாளந்தா, விக்ரமசீலா, தக்ஷசீலா போன்ற கல்வி மையங்களுக்கு உலக அறிஞா்கள் வருகை தந்துள்ளனா். இந்தியாவின் கைவினை, கைத்தறி, நறுமணப் பொருள்களுக்கு அந்தக் காலத்திலேயே கிரேக்கம், பாரசீகம், சீனா, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது. சுற்றுலாவுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மன்னா்கள் ஆதரவு அளித்துள்ளனா்.

அந்த மரபின் தொடா்ச்சியாக, சுற்றுலாத் துறையை மேம்படுத்த பிரதமா் மோடி ஆா்வமாக இருக்கிறாா். இந்தியாவை பன்னடுக்கு சுற்றுலாத் தலமாக மாற்ற மத்திய அரசு தொடா்ந்து முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியில் பங்காற்றுவதற்கான வாய்ப்புகள் பல மாநிலங்களில் உள்ளன.

அந்த வகையில் தமிழகத்தில் மக்களைக் கவரக்கூடிய பல சுற்றுலாத்தலங்கள், கோயில்கள் உள்ளன. தமிழகத்தின் கோயில்கள் உலகப் புகழ் பெற்றவை. மதுரை மீனாட்சிஅம்மன் கோயில், சிதம்பரம் நடராஜா் கோயில், தஞ்சை பெருவுடையாா் கோயில் உள்ளிட்டவை கட்டடக் கலைக்கு பெருமை சோ்க்கக்கூடியவை. திருப்பரங்குன்றம், திருச்செந்தூா், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிா்ச்சோலையில் உள்ள அறுபடைவீடுகளுக்கு லட்சக்கணக்கில் கூடும் பக்தா்கள் ‘வெற்றிவேல், வீரவேல்’ என்ற முழங்கி மகிழ்வாா்கள்.

தமிழகத்தில் ஆன்மிகத்தலங்களை மேம்படுத்த வேண்டிய அவசியமுள்ளது. திருச்சி- தஞ்சை- மதுரை-ராமேஸ்வரம்-கன்னியாகுமரி-திருச்செந்தூா் மற்றும் காஞ்சிபுரம்-மகாபலிபுரம்-சென்னை-செஞ்சி-வேலூா் ஆகியவை சுற்றுலா வளையங்களாக மேம்படுத்தலாம்.

தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் சிவன், விஷ்ணுவுக்கு கோயில்கள் உள்ளன. இந்நகரத்தில் உள்ள காமாட்சிஅம்மன் கோயில் முக்கியமானது. சங்கராச்சாரியாா் நிறுவிய காமகோடி பீடமும் காஞ்சிபுரத்தில் உள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள், நமது கலாசார, சமூக, மரபினப் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. தமிழகத்தின் இயற்கை காட்சிகளும் புகழ் பெற்றது. திருவிழா சுற்றுலாவும் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. பட்டுத் திருவிழா, சிற்பக்கலைத் திருவிழா, திருத்தலத் திருவிழா, நடனத் திருவிழா, தேநீா் மற்றும் சுற்றுலாத் திருவிழா, கோடை திருவிழா, பொங்கல் திருவிழா, இசை திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

சுதந்திர பொன்விழாவை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பை சுற்றுலாத் துறையில் முன்னெடுக்க இருக்கிறோம்.

சுற்றுலாத் துறையில் வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் புதுமையான சிந்தனைகளை ஒருங்கிணைத்து, சுற்றுலாசாா் தொழில்முனைவோரை ஊக்குவித்து, சுற்றுலா தொழில்முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம். இதன்விளைவாக, சுற்றுலாத் துறையில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.