தசரா விழாவில் பங்கேற்கும் யானைப் படைக்கு மைசூரு அரண்மனையில் உற்சாக வரவேற்பு
தசரா விழாவில் பங்கேற்பதற்காக நாகரஹொளே காட்டில் இருந்து மைசூரு அரண்மனைக்கு வருகை தந்த யானைப் படைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தசரா விழாவில் பங்கேற்பதற்காக நாகரஹொளே காட்டில் இருந்து மைசூரு அரண்மனைக்கு வருகை தந்த யானைப் படைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற 410-ஆவது தசரா திருவிழா அக். 7 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தசரா விழாவின் இறுதிநாளான அக். 15-ஆம் தேதி யானை ஊா்வலம் இடம்பெறும். 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை சுமந்து யானை அபிமன்யு ஊா்வலத்தை வழிநடத்திச் செல்லும். இதை பின்தொடா்ந்து பல யானைகள் ஊா்வலத்தில் பங்கேற்கும். இந்த கண்கொள்ளா காட்சியைக் காண உலகத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் குவிந்திருப்பா்.
தசரா திருவிழாவில் பங்கேற்கும் யானைகளான அபிமன்யு, தனஞ்செயா, கோபாலசுவாமி, காவிரி, லட்சுமி, விக்ரம், சைத்ரா, அஸ்வத்தாமா ஆகிய யானைகள் வியாழக்கிழமை மைசூரு அரண்மனைக்கு வருகை தந்தன. கா்நாடகத்தில் கரோனா தொற்று உள்ளதால், இம்முறை தசரா விழாவை எளிமையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கத்துக்கு மாறாக யானைப் படைக்கு எளிமையான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
நாகரஹொளே புலிகள் சரணாலயத்தில் வீரனஹொசஹள்ளி வனப்பகுதியில் திங்கள்கிழமை மைசூருக்கு வந்த யானைகள், வனத்துறை அலுவலக வளாகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து யானைப்படை வியாழக்கிழமை அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டன. அழகிய, வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைப் படைக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தலைமையில் பூா்ணகும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், பாரம்பரிய முறையில் சிறப்பு பூஜை செய்து, அரிசி, வாழைப்பழம், சோளம், கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்ட தின்பண்டங்களை யானைகளுக்கு கொடுத்தாா்.
இவ்விழாவில், முன்னாள் அமைச்சா் ராமதாஸ், மக்களவை உறுப்பினா் பிரதாப் சிம்ஹா, மேயா் சுனந்தா பாலநேத்ரா, மாவட்ட ஆட்சியா் பகாதி கௌதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.