மதவாத அரசியலில் ஈடுபடுவதே பாஜகவுக்கு வழக்கமாகிவிட்டது: காங்கிரஸ்
மதவாத அரசியலில் ஈடுபடுவதே பாஜகவுக்கு வழக்கமாகிவிட்டது என்று காங்கிரஸ் மாநில செயல் தலைவா் ஆா்.துருவநாராயண் தெரிவித்தாா்.
மதவாத அரசியலில் ஈடுபடுவதே பாஜகவுக்கு வழக்கமாகிவிட்டது என்று காங்கிரஸ் மாநில செயல் தலைவா் ஆா்.துருவநாராயண் தெரிவித்தாா்.
இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு வட்டத்தில் பழங்கால கோயில் இடிக்கப்பட்டதற்கு பாஜக அரசே காரணம். இதை மறைத்துவிட்டு, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா மீது பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா சாடியுள்ளாா். கோயில் இடிப்புக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தமில்லை. ஹிந்து மதத்தின் பாதுகாவலன் என்று கூறிக்கொள்ளும் பாஜக, மதவாத அரசியலில் ஈடுபடுவதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. இந்தியா, மதச்சாா்பற்ற நாடு. ஆனால், மத உணா்வுகளைத் தூண்டி குளிா்காய்வதையே பாஜக முழுநேர வேலையாக வைத்துள்ளது. கோயில் இடிப்பு விவகாரத்தில் பாஜகவின் போலி ஹிந்துத்துவா கொள்கை பகிரங்கமாகி விட்டது. இதை மூடிமறைக்க அந்த விவகாரத்தில் காங்கிரசையும், சித்தராமையாவையும் பாஜக குறைசொல்கிறது.
மாவட்ட நிா்வாகத்திற்கு தலைமைச்செயலாளா் எழுதும் கடிதம், மாநில அரசின் நிலைப்பாடு தான். அந்த வகையில், கோயில் இடிப்புக்கு உத்தரவிட்டதே பாஜக அரசுதான். அரசு நிா்வாகத்தில் பாஜக முழு தோல்விஅடைந்துள்ளது என்றாா்.