கேப்டனின் குடும்பம் ஒரு கார் வாங்கக்கூட தகுதி இல்லையா? பிரேமலதா அவேசம்!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி...
ஒரு கார் வாங்குவதற்குகூட, கேப்டன் குடும்பத்திற்கு தகுதி இல்லையா என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாகப் பேசியுள்ளார்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொருளாளர் எல். கே. சுதீஷ் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்தக் கூட்டத்தில் தேர்தல் பிரசாரம் குறித்த விஷயங்களும், தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது அவர் பேசுகையில்,
”வரும் சட்டமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்கின்ற நேரத்தில் நாங்கள் நடத்திய இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியமானது.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கைகள், பிரசாரங்கள் மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் என அனைத்தையும் ஆலோசித்து கொண்டிருக்கிறோம்.
தற்போது நாங்கள் அமைந்திருக்கக்கூடிய கூட்டணியானது எங்கள் கழகத்தில் உள்ள கடைக்கோடி தொண்டர்களும் விரும்பிய கூட்டணி. இந்தக் கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் கண்டிப்பாக வெற்றி பெறும்.
புதுச்சேரியில் தேமுதிக கண்டிப்பாக போட்டியிடுகிறது. அதற்கான விருப்ப மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
எங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் பேசப்படுவது அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. தேமுதிக மீது எந்த வழக்குகளும் இல்லை, ஊழல் குற்றங்களும் இல்லை. விஜயகாந்த் அவர்களை குற்றம் கூறியவர்கள், இப்போது என் மீதும் அவதூறு பரப்புகிறார்கள். ஒரு கார் வாங்குவதற்குகூட, கேப்டன் குடும்பத்திற்கு தகுதி இல்லையா.
குறைக்கும் நாய் குறைத்துக் கொண்டுதான் இருக்கும். எங்களுக்கு எத்தனை சீட் கொடுத்தார்கள் என யாருக்குமே தெரியாது, அப்பொழுது எதற்கு விவாதத்தில் பேசுகிறார்கள்?
வாழ்த்துவோர் வாழ்த்தட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், உண்மைக்கு புறம்பான செய்திகளை நாங்கள் கருத்தில் கொள்ளமாட்டோம்” என்றார்.