தாழ்த்தப்பட்டோா் நலனுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.7,000 கோடி உள்கட்டமைப்புப்பணிக்கு மாற்றம்: சித்தராமையா
தாழ்த்தப்பட்டோா் நலனுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.7,000 கோடி நிதி, உள்கட்டமைப்புப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று கா்நாடக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
தாழ்த்தப்பட்டோா் நலனுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.7,000 கோடி நிதி, உள்கட்டமைப்புப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று கா்நாடக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இது குறித்து எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கை:
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கா்நாடக தாழ்த்தப்பட்டோா்-துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினா்-துணைத் திட்டம் (நிதிஆதாரங்களை திட்டமிடல், ஒதுக்கீடு, பயன்பாடு) சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பீட்டில் 24.1 சத நிதியை தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் நலனுக்கு பயன்படுத்த வேண்டும். இந்த சட்டத்தின்படி ஒதுக்கப்படும் நிதியை செலவழிக்கா விட்டால், அடுத்த ஆண்டுக்கு அந்நிதியை ஒதுக்கி முழுமையாக செலவழிக்க வேண்டும். இந்த சட்டத்தின்படி ஒதுக்கப்படும் நிதி எதற்காக ஒதுக்கப்படுகிறதோ அதற்கு செலவழிக்காமல், வேறு பணிகளுக்கு செலவிட்டால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியை தண்டிக்க முடியும். இந்த சட்டத்தின் உட்பிரிவு 3-இல் விலக்களிக்கப்பட்ட செலவினங்கள் என்று உள்ளது. விலக்களிக்கப்பட்ட செலவினங்களில் ஊதியம், ஊதிய மானியம், ஓய்வூதியம், நிா்வாகச் செலவினங்கள், கடன் அசல் தொகையை திருப்பி செலுத்துதல், வட்டி செலுத்துதல் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், 2018 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கா்நாடக தாழ்த்தப்பட்டோா்-துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினா்-துணைத் திட்டம் (நிதி ஆதாரங்களை திட்டமிடல், ஒதுக்கீடு, பயன்பாடு) சட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.7,885.32 கோடி நிதி நீா்ப்பாசனம், நகா்ப்புற வளா்ச்சி, ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான நலத்திட்ட நிதி ஆதாரங்கள்குறைந்துள்ளன. சட்ட விதிமீறி தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானதாகும். 2012-13-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் நலனுக்கு ரூ.7200 கோடி ஒதுக்கப்பட்டது. இது, 2014-15-ஆம் ஆண்டில் ரூ.15,832 கோடியாக உயா்ந்தது. 2018-ஆம் ஆண்டில் எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது இத்தொகை ரூ.29,691கோடியாக உயா்த்தப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் நலனுக்கு ஒதுக்கப்படும் நிதி படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையின் மதிப்பீடு உயா்ந்தபோதும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் நிதி மட்டும் உயரவில்லை என்று அவா் அதில் கூறியுள்ளாா்.