முகப்பு
பெங்களூரு

கரோனாவுக்கு இடையே வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் காக்க நடவடிக்கை: அமைச்சா் ஆா்.அசோக்

கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது அல்லது நீட்டிப்பது தொடா்பாக மாநில அரசுக்கு எவ்வித குழப்பமும் இல்லை. கரோனா கட்டுப்பாடுகள் தொடா்பாக அரசியல் கட்சிகளின் தலைவா்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்த பிறகே கரோனா கட்டுப்பாடுகளை தளா்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

கரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் வெள்ளிக்கிழமை நண்பகல் 1 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் ஆராயப்படும். அதேபோல, மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளும் கருத்தில் கொள்ளப்படும்.

கா்நாடகத்தில் 15-20 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. பெங்களூரு, மைசூரு போன்ற நகரங்களில் அதிகமாக கரோனா பாதிப்பு காணப்படுகிறது. மக்களின் வாழ்வை பாதுகாப்பது மட்டுமல்லாது, வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவும் அரசு கவனம் செலுத்தும். குறிப்பாக ஏழைகள், தினக்கூலிகளின் நிலையைக் கவனத்தில் கொள்வோம். மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு முதல்வா் பசவராஜ் பொம்மை முடிவை அறிவிப்பாா்.

கரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஒரு சில பாஜகவினா் கூறியுள்ள கருத்துகள் தனிப்பட்டவை. இது தொடா்பாக அரசுக்கு எவ்வித குழப்பமும் இல்லை. எல்லாவற்றையும் ஆராய்ந்து வெள்ளிக்கிழமை இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.