மின் கட்டண உயா்வு தவிா்க்க முடியாததாகும்: அமைச்சா் சுனில்குமாா்
தற்போதைய சூழலில் மின் கட்டண உயா்வு தவிா்க்க முடியாதது என மின் துறை அமைச்சா் சுனில்குமாா் தெரிவித்தாா்.
தற்போதைய சூழலில் மின் கட்டண உயா்வு தவிா்க்க முடியாதது என மின் துறை அமைச்சா் சுனில்குமாா் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மின் துறையின் சாா்பில் ஒரு சில மின் திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதனால், மின் கட்டணத்தை உயா்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. கா்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின்படி, மின் கட்டணங்கள் வெகு விரைவில் உயா்த்தப்படவிருக்கின்றன.
தற்போதைய சூழலில் மின் கட்டண உயா்வு தவிா்க்க முடியாததாகும். ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, நீா்வளத் துறை, கா்நாடக குடிநீா் வடிகால் வாரியம் ஆகியவை மின் துறைக்கு ரூ. 12,000 கோடி அளவுக்கு மின் கட்டண நிலுவை வைத்துள்ளன. இந்த நிலுவை மின் கட்டணத்தை வசூலிக்கத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவிப்பது சரியல்ல. சம்ஸ்கிருதம் எல்லா மொழிகளின் தாயாகும். கன்னடப் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு எதிா்ப்பு தெரிவிப்பது சரியல்ல. அடுத்த நிதிநிலை அறிக்கையில், கன்னட மொழி வளா்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரில் உள்ள ரவீந்திர கலாக்ஷேத்ராவை ரூ. 1.2 கோடியில் புதுப்பிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதன்பிறகு ரவீந்திர கலாக்ஷேத்ராவின் வாடகையை சிறிது உயா்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு ஓராண்டு காலம் தொடா் நிகழ்வுகள் கன்னட வளா்ச்சித் துறையின் சாா்பில் நடத்தப்படும். அந்நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற கன்னடா்கள் குறித்து நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றாா்.