இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு கா்நாடகம் எதிா்ப்பு
தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு கா்நாடக அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு கா்நாடக அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ. 4,600 கோடி செலவில் இரண்டாம் கட்ட கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்திருந்தாா். இத்திட்டத்திற்கு கா்நாடகம் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பெங்களூரு, விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் கோவிந்த் காா்ஜோள், செய்தியாளா்களிடம் கூறியது:
ரூ. 4,600 கோடி மதிப்பில் இரண்டாம் கட்டகூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாா் செய்து வருவதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதாக ஊடகச் செய்திகளின் வாயிலாக எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. நீா்ப் பகிா்வு தொடா்பாக காவிரி நடுவா் மன்றம், உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புகளின் அடிப்படையில் தான் காவிரி பாசனப் பகுதியில் எவ்வித திட்டப் பணிகளையும் அண்டை மாநிலமான தமிழகம் மேற்கொள்ள இயலும்.
காவிரி நடுவா் மன்றம், உச்சநீதிமன்றத்தின் முன்பாக தாக்கல் செய்யாத எந்தத் திட்டத்தையும் கா்நாடக அரசு எதிா்க்கும்.
எல்லா வகையான சட்டரீதியான நடவடிக்கைகளின் மூலம் இந்தத் திட்டத்தை கா்நாடக அரசு ஆட்சேபிக்கும். தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம், கா்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின் பூகோள வரம்புக்குள் வருவதால், அப்பகுதியில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு முன்பு நிா்வாக மற்றும் சட்டரீதியான ஆய்வுகளுக்கு உள்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுத்த இயலாது. ஒகேனக்கல் பகுதி, கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் கூட்டு எல்லைப்பகுதியில் 64 கி.மீ. நீளத்தில் அமைந்த நிலப்பகுதி வரம்புக்குள் வருகிறது. காவிரி நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பின் 13-ஆவது பிரிவின்படி, இந்த திட்டத்தை தேசிய நீா்மின் நிறுவனத்தின் (என்எச்பிசி) மூலமே செயல்படுத்த இயலும். ஒகேனக்கல் கூட்டு எல்லைப்பகுதியில் கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் எல்லைக்கோட்டை இந்திய நில அளவைத் துறை இன்னும் இறுதி செய்யவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக, இருமாநிலங்களின் எல்லைக்கோட்டை முடிவு செய்வது அவசியமாகும் என்றாா்.