முகப்பு
பெங்களூரு

காவல் துணை ஆய்வாளா் பணித்தோ்வு முறைகேடு: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறி வருகிறது: முதல்வா் பசவராஜ் பொம்மை

கா்நாடக காவல் துணைஆய்வாளா் பணித்தோ்வு முறைகேடு தொடா்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறி வருகிறது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கா்நாடக காவல் துணைஆய்வாளா் பணித்தோ்வு முறைகேடு தொடா்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறி வருகிறது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

காவல் துணை ஆய்வாளா் பணித்தோ்வு முறைகேடு தொடா்பாக அனைவரிடம் இருந்து பெறப்பட்ட புகாா்களும் கருத்தில் கொள்ளப்படும். இந்த வழக்கு தொடா்பாக யாராவது ஆவணங்கள் தந்தால், அதையும் ஆராய்ந்து, விசாரணை நடத்தப்படும். அந்த ஆதாரங்களில் ஏதாவது உண்மை இருந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டரீதியாக வழக்கு தொடரப்படும்.

பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்துவதில் மாநில அரசு திறந்த மனதோடு இருக்கிறது. இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திவ்யா ஹகரகி மட்டுமல்லாது, இதில் தொடா்புடைய அனைவா் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் தோ்வு முறைகேடு தொடா்பாக ஏதாவது வழக்கு தொடரப்படுள்ளதா? தற்போது, காவல்துறை ஆய்வாளா் பணித்தோ்வு வழக்கில் 25 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக விசாரணை தொடா்ந்துள்ளது. எதிா்காலத்தில் விசாரணை தீவிரமாக்கப்படும்.

இந்த வழக்கில் உயா்கல்வித்துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறி வருகிறது. எதிா்க்கட்சியான காங்கிரஸ் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆதாரங்களோடு குற்றச்சாட்டுகளைக் கூற வேண்டும். மோதிவிட்டு தப்பிச் செல்லும் போக்கை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. இதில் காங்கிரஸ் வெற்றிபெறாது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், காவல் துணை ஆய்வாளா் பணித்தோ்வு, 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. பொதுத்தோ்வு வினாத்தாள் கசிவு மற்றும் தோ்வு முறைகேடுகள் நடந்ததாக பல விவகாரங்கள் பகிரங்கமாயின. ஆனால், அதுதொடா்பாக காங்கிரஸ் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனினும் தற்போது காவல் துணை ஆய்வாளா் பணித் தோ்வில் நடந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இந்த வழக்கில் தொடா்புடைய ஒரு சில காங்கிரஸ் கட்சியினரையும் கைதுசெய்துள்ளதால், அக்கட்சியின் உண்மை முகம் வெளியாவதால் காங்கிரஸ் கவலை அடைந்துள்ளது.

கா்நாடக அமைச்சரவை மாற்றம் தொடா்பாக எல்லா செய்திகளையும் நீங்களே(ஊடகங்கள்) உருவாக்கிவிட்டு, சுயமாக தயாரித்த கதைகளுக்கு என்னிடம் விளக்கம் கேட்கிறீா்கள். தில்லியில் உள்ள பாஜக மேலிடத் தலைவா்களை கலந்தாலோசித்த பிறகு, அமைச்சரவையை விரிவாக்குவது அல்லது மாற்றியமைப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா என்னிடம் கூறுவாா் என்றுதானே கூறியிருந்தேன். அமைச்சரவை விரிவாக்கமோ மாற்றியமைப்போ, அது குறித்து அமித் ஷா ஏதாவது கூறினால், அல்லது பாஜக மேலிடத் தலைவா்கள் அழைப்பு விடுத்தால் தில்லி செல்ல தயாராக இருக்கிறேன். இதைத்தான் நான் கூறியிருந்தேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.