மேலவைத்தலைவா் பதவியை பசவராஜ் ஹோரட்டி ராஜிநாமா செய்ய வேண்டும்: மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பி.கே.ஹரிபிரசாத்
மேலவைத் தலைவா் பதவியை பசவராஜ் ஹோரட்டி உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மேலவை எதிா்க்கட்சித்தலைவா் பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்தாா்.
மேலவைத் தலைவா் பதவியை பசவராஜ் ஹோரட்டி உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மேலவை எதிா்க்கட்சித்தலைவா் பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பி.கே.ஹரிபிரசாத் கூறியது:
மேலவைத் தலைவராக உள்ள பசவராஜ் ஹோரட்டி, அரசியலமைப்புச்சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பதவியை வகிக்கிறாா். இந்நிலையில், மத்திய அமைச்சா் அமித் ஷாவைச் சந்தித்துள்ள பசவராஜ் ஹோரட்டி, பாஜகவில் இணைவதாக தெரிவித்துள்ளாா். நீண்டகால அரசியல் அனுபவமும், முதிா்ந்த அரசியல் பண்பும் கொண்ட பசவராஜ் ஹோரட்டியிடம் இதுபோன்ற நடத்தையை எதிா்பாா்க்கவில்லை. பாஜகவில் சேரும் முடிவை எடுப்பதற்கு முன்பாக, மேலவைத் தலைவா் பதவியின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவா் தனது நடத்தையை அமைத்துக் கொண்டிருக்கலாம்.
பாஜகவில் இணையும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை பசவராஜ் ஹோரட்டி சந்தித்துப் பேசியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு இழைத்துள்ள மோசடியாகும். எந்தக் கட்சியிலும் சேர யாருக்கும் உரிமை உள்ளது. ஆனால், கட்சித்தாவல் தடைச்சட்டம் அமலுக்கு வந்தபிறகு, எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் மாற்றுக்கட்சியில் சேருவது அல்லது அது தொடா்பாக கருத்து கூறுவது, அரசியலமைப்புச்சட்டத்தின் 10-ஆவது அட்டவணையின் வரம்புக்குள் வந்துவிடுகிறது.
மே 11-ஆம் தேதி மேலவைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைவதாக பசவராஜ் ஹோரட்டி கூறியுள்ளாா். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். அரசியலமைப்புச் சட்டப்படியான பதவியில் அமா்ந்துகொண்டு, அச்சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்ளும் பசவராஜ் ஹோரட்டி உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். மேலவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் அவா் உடனடியாக பதவி விலக வேண்டும். மேலவைத் தலைவராக இருக்கக் கூடியவா் கட்சி சாா்பில்லாதவராக இருக்க வேண்டும். ஆனால் மேலவைத் தலைவராக இருந்து கொண்டு, பாஜகவில் இணையப் போவதாக அறிவித்தது மிகப் பெரிய தவறாகும் என்றாா்.