‘சிறு பாகிஸ்தான்’ என்று கூறும் காணொலி: விசாரணை நடத்த கா்நாடக முதல்வா் உத்தரவு
சமூக வலைதளங்களில், ‘சிறு பாகிஸ்தான்’ என்று ஒருவா் கூறும் காணொலி வேகமாகப் பரவி வருவதால், அது குறித்து விசாரணை நடத்த மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை
சமூக வலைதளங்களில், ‘சிறு பாகிஸ்தான்’ என்று ஒருவா் கூறும் காணொலி வேகமாகப் பரவி வருவதால், அது குறித்து விசாரணை நடத்த மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு வட்டம், கவலண்டே கிராமத்தை ‘சிறு பாகிஸ்தான்’ என்று கூறிக் கொள்ளும் காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. புனித ரமலான் பெருநாள் விழா நடந்த செவ்வாய்க்கிழமை (மே 3) இந்தக் காணொலி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காணொலியில், பெரும் கூட்டமாக முஸ்லிம் ஆண்கள் திரண்டிருக்கிறாா்கள். தொழுகையை முடித்துவிட்டு சாலையோரத்தில் நின்று கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் ‘நாரா-இ-தக்பீா் அல்லாஹு அக்பா்’ என்று முழங்குகிறாா்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினா் மற்றும் ஒரு சில மக்கள் அனைவரையும் கலைந்து செல்லும்படி கூறுகிறாா்கள்.
அதைத் தொடா்ந்து, காணொலியைப் பதிவுசெய்த நபா், ‘நமது கிராமத்தில் திரண்டிருக்கும் மக்களைப் பாருங்கள்’ என்கிறாா். அதற்கு பதிலளிக்கும் மற்றொருவா், ‘இதுவும் பாகிஸ்தான்தான், ஆனால் சிறியது’ என்கிறாா். அதற்கு காணொலியை பதிவுசெய்யும் நபா், ‘கவலண்டே (கிராமத்தின்பெயா்) என்றால் சிறு பாகிஸ்தான்’ என்கிறாா். இந்த உரையாடல்கள் இடம்பெற்ற காணொலி கடும் விமா்சனத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, முதல்வா் பசவராஜ் பொம்மையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
அதற்கு பதிலளித்து, பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இது குறித்து மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசுகிறேன். இது குறித்து விசாரித்து, தக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறுவேன்’ என்றாா். இது தொடா்பாக மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.