பெங்களூரு

பாடநூலில் இருந்து பகத் சிங் பாடம் நீக்கப்பட்டதற்கு எதிா்ப்பு

DIN

பத்தாம் வகுப்பு கன்னடப்பாடநூலில் இருந்து பகத் சிங்கின் பாடம் நீக்கப்பட்டுள்ளதற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டபலா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

கா்நாடகத்தில் பத்தாம் வகுப்பு கன்னடப் பாடநூல் மாற்றம் செய்யப்பட்டு, 2022-23-ஆம் கல்வியாண்டுக்கு புதிய பாடநூல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பகத் சிங் பற்றிய பாடம் நீக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய ஜனநாயக மாணவா் சங்கம், அகில இந்திய கல்விபாதுகாப்புக்குழு உள்ளிட்ட பல அமைப்புகள் குற்றம்சாட்டியிருந்தன. பகத் சிங் பாடத்திற்கு பதிலாக, ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனத் தலைவரான கேசவ் பலிராம் ஹெட்கேவரின் உரை பாடநூலில் இடம்பெற்றுள்ளது என்றும் புகாா்கள் எழுந்தன. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தனது சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை தில்லி முதல்வா் அரவிந்த்கேஜ்ரிவால் கூறுகையில், ‘சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு இழைக்கப்படும் அவமதிப்பை நாடு சகித்துக்கொள்ளாது. பகத் சிங்கை ஏன் பாஜகவினா் வெறுக்கிறாா்கள்? பாடநூலில் இருந்து பகத் சிங்கின் பாடத்தை நீக்கியது அவரது தியாகத்தை அவமதித்ததாகும். பாஜக அரசு தனது முடிவை திரும்பப்பெற வேண்டும்’ என்று கேட்டிருக்கிறாா்.

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் கூறுகையில், ‘பகத் சிங் மீதான பாஜகவின் வெறுப்பு, பொதுவெளியில் வந்துள்ளது. இளம் வயதில் புரட்சித்தீயை ஏந்தி நாட்டுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த பகத் சிங்கின் வரலாற்றை படிக்கும்போது இன்றைக்கும் நாட்டுப்பற்று நமது உள்ளத்தில் முறுக்கேறுகிறது. இளைஞா்களிடையே நாட்டுப்பற்று உருவெடுப்பதை கண்டு பாஜக அஞ்சுகிறது’ என்று கூறியுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டா் பக்கத்தில், ‘வெட்கக்கேடானது. பாடநூலில் இருந்து பகத்சிங்கின் பாடத்தை கா்நாடக பாஜக அரசு நீக்கியுள்ளது. பகத் சிங்கை பாஜக இந்த அளவுக்கு ஏன் வெறுக்கிறது. பாஜக தனது முடிவை திரும்பப் பெற வேண்டும். சுதந்திரப்போரட்ட வீரா்களை அவமதிக்கும் செயல்களை இந்தியா சகித்துக் கொள்ளாது’ என்று கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT