அகில இந்திய காங்கிரஸ் குழு பொதுச்செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா கலந்துகொண்டது அதிகாரப்பூா்வ அரசு ஆய்வுக்கூட்டம் அல்ல என்று முதல்வா் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளாா். பெங்களூரில் உள்ள ஷாங்ரிலா நட்சத்திர விடுதியில் செவ்வாய்க்கிழமை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தலைமையில் நடந்த அரசு ஆய்வுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் குழு பொதுச்செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா கலந்துகொண்டதாக கூறப்படும் புகைப்படத்தை தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டிருந்த கா்நாடக பாஜக, கா்நாடக அரசு கூடுதல் தலைமைச்செயலாளா் ராகேஷ்சிங், பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையா் துஷாா்கிரிநாத் உள்ளிட்ட முக்கியமான சில அதிகாரிகள் கலந்துகொண்டகூட்டத்தில் சுா்ஜேவாலா கலந்துகொண்டது குறித்து கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் அந்த ட்விட்டரில்,‘ஏடிஎம் அரசின் ரகசியம் என்ன? பெங்களூரு, ஷாங்ரிலா விடுதியில் ஏடிஎம் அரசின் ரகசிய கூட்டம் நடந்துள்ளது. பெங்களூரு மாநகராட்சி மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் மாநில அரசு அல்லது பெங்களூரு மாநகராட்சிக்கும் எவ்வகையிலும் சம்பந்தமில்லாத காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலாவுக்கு என்ன வேலை? இது 85 சதம் கமிஷன் பெற கூட்டுஒப்பந்தம் செய்துகொள்வதற்கான கூட்டமா? முதல்வா் சித்தராமையா, டி.கே.சிவக்குமாா் பதில் கூறட்டும்.‘ என்று குறிப்பிட்டுள்ளனா். இது குறித்து மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தனது ட்விட்டா் பக்கத்தில் கூறுகையில்,‘கா்நாடகத்தில் சித்தராமையா அரசு இருக்கிறதா? அல்லது 10,ஜன்பத் அரசு இருக்கிறதா?‘ என்று கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தவிவகாரம் தொடா்பாக ஆளுநா் தாவா்சந்த்கெலாட்டை சந்தித்து புகாா் அளிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இது குறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியது: ரன்தீப்சிங் சுா்ஜேவாலா தலைமையில் எந்த கூட்டமும் நடக்கவில்லை. ஒருசில எம்.எல்.ஏ.க்களிடம் அவா் பேசிக்கொண்டிருந்தாா். துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் அங்கிருந்திருக்கிறாா். அது துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் கலந்துகொண்ட கூட்டம் அவ்வளவு தான். மேலும், அங்கு நடந்தது அதிகாரப்பூா்வ அரசு ஆய்வுக்கூட்டம் அல்ல. பெங்களூரு மாநகராட்சி தோ்தல் குறித்துவிவாதிக்க பெங்களூரை சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்பட்டிருக்கிறாா்கள். அங்கு சுா்ஜேவாலாவும் சென்றிருக்கிறாா் என்றாா் அவா். எனினும், இந்தவிவகாரத்தை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.