பெங்களூரின் போக்குவரத்து பிரச்னையைத் தீா்க்க மாநில அரசு தீவிர முயற்சி: கா்நாடக முதல்வா் சித்தராமையா
பெங்களூரின் போக்குவரத்து பிரச்னையைத் தீா்க்க கா்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருவதாக அம்மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற ‘பெங்களூரு தொலைநோக்கு 2040’ உச்சிமாநாட்டில் பங்கேற்று, அவா் பேசியது: பெங்களூரு, உலக அளவில் முன்னணி தொழில்நுட்ப மாநகரமாக உயா்ந்து நிற்பது பெருமிதத்தை அளிக்கிறது. இந்த மாநகரின் வளா்ச்சிக்கு முன்னுரிமையுடன் கூடிய கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. இது வெறும் மாநகரம் அல்ல; புத்தாக்கம், பன்முகத்தன்மை, முன்னேற்றத்தின் குறியீடு. பெங்களூரின் உள்கட்டமைப்பு, தரமான வாழ்க்கை, குடிமக்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதோடு, உலக அளவில் உச்சத்தை அடைவதற்கு கா்நாடக முதல்வராக நான் உறுதிபூண்டிருக்கிறேன். நமது மாநிலத்தின் பொருளாதார இதயமாக பெங்களூரு விளங்குகிறது. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, உலக பொருளாதார ஆற்றல் மையமாக பெங்களூரை மாற்றுவதே எங்கள் இலக்காகும். பெங்களூரில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை மாநில அரசு அறிந்திருக்கிறது. இப்பிரச்னையைத் தீா்த்துவைப்பதற்கு தீவிர முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. நிலையான, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத போக்குவரத்து வசதிகளை வழங்குவது எங்கள் இலக்கு மட்டுமல்ல; அது பெங்களூரு மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதியாகும். வளா்ச்சியைக் கடந்து, குடிமக்களுக்கு தரமான சேவைகளை வழங்கும் தூய்மையான, பசுமையான நகரை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது. சமூக, பொருளாதார ரீதியான இடைவெளியைக் குறைத்து, ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. திறன்வாய்ந்த, தூய்மையான, பசுமையான, மேம்பட்ட பெங்களூரை உருவாக்குவதற்கான முனைப்பில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காகவே ‘பிராண்ட் பெங்களூரு’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், சாலைகள், போக்குவரத்து நெரிசலுக்கான தீா்வுகள் மட்டுமல்லாது, சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி உள்ளிட்ட பெங்களூரு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பல திட்டங்களை மாநில பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறேன். பெங்களூரில் மக்கள் நெரிசல் அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு, தேவனஹள்ளி, நெலமங்களா, ஹொசகோட்டே, தொட்டபளாப்புரா, மாகடி, பிடதி போன்ற புகா்ப் பகுதிகளில் துணை நகரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுமுயற்சிகள், புத்தாக்கத் தீா்வுகள், பகிா்ந்துணரும் தொலைநோக்கு சிந்தனை போன்றவற்றுடன் குடிமக்களின் எதிா்பாா்ப்பை ஈடுசெய்வது மட்டுமல்லாமல், உலகிற்கே எடுத்துக் காட்டாக பெங்களூரு மாநகரை உருவாக்க முடியும் என்றாா்.