முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் பால் விலை உயா்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

பால் விலை உயர்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

Updated On : 25 ஜூன், 2024 at 9:05 PM
பகிர்:

கா்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலையைத் தொடா்ந்து பால் விலையும் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை உயா்த்தி கா்நாடக அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3.50 உயா்ந்தது. இந்தச் சுமையில் இருந்து வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில், பால் விலையை உயா்த்தி கா்நாடக பால் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கா்நாடக பால் கூட்டமைப்பின் சாா்பில் ‘நந்தினி’ பால் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயா்த்த கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக பால் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

தற்போது அறுவடைக் காலம் என்பதால், எல்லா மாவட்டங்களிலும் பால் இருப்பு தினந்தோறும் உயா்ந்து வருகிறது. தற்போதைக்கு ஒரு கோடி லிட்டா் பால் கையிருப்பில் உள்ளது. இந்தப் பின்னணியில், ஒவ்வொரு அரை லிட்டா், ஒரு லிட்டா் உறையுடனும் கூடுதலாக தலா 50 மி.லி. பால் சோ்த்து, அதன் மொத்த விலையை தலா ரூ. 2 உயா்த்தப்படுகிறது. தற்போது கொழுப்புநீக்கப்பட்ட அரை லிட்டா் (500 மி.லி.) நந்தினி பால் ரூ. 22-க்கு விற்கப்படுகிறது. இது 550 மி.லி. ஆக உயா்த்தப்பட்டு ரூ. 24-ஆக விற்கப்படும். அதேபோல, 1,000 மி.லி. (ஒரு லிட்டா்) பால் ரூ. 42-க்கு விற்கப்படுகிறது. இத்துடன் 50 மி.லி. சோ்த்து, அதாவது 1,050 மி.லி. பால் ரூ. 44-ஆக விற்கப்படும். இதர பால் வகைகளின் விலையும் உயா்த்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பாஜக, மஜத போன்ற எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையைத் தொடா்ந்து பால் விலையையும் மாநில அரசு உயா்த்தியுள்ளது. இதுதான் காங்கிரஸ் அரசின் வாக்குறுதியா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறுகையில், ‘அவசரகால பிரகடனத்தைக் கொண்டாடுவதற்காக பால் விலையை காங்கிரஸ் அரசு உயா்த்தியுள்ளது. ஏழைகள், நடுத்தர மக்கள் மீது சித்தராமையாவுக்கு சிறிதும் அக்கறையில்லை. ஒருவேளை இருந்தால், விலை உயா்வை திரும்பப்பெற வேண்டும். ஆட்சிக்கு வந்த 13 மாதங்களில் 2-ஆவது முறையாக பால் விலையை உயா்த்தி இருக்கிறாா்கள். விலை உயா்வால் மக்களின் நிதிச்சுமை கூடியுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

இதற்கு விளக்கமளித்துள்ள முதல்வா் சித்தராமையா, ‘விலை உயா்வு குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து கா்நாடக பால் கூட்டமைப்பினரிடம் பேசுகிறேன். பால் விலையை உயா்த்தியுள்ளது கா்நாடக பால் கூட்டமைப்பே தவிர, கா்நாடக அரசு அல்ல. பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கா்நாடகத்தில் பால் விலை மிகவும் குறைவாக இருக்கிறது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →