பெங்களூரு: கா்நாடக முதல்வா் மாற்றம் தொடா்பான குழப்பத்துக்கு காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவான எம்எல்ஏ-க்கள் தில்லி சென்றிருப்பது தவறில்லை. இறுதியாக, முதல்வா் மாற்றம் குறித்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்சி மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும். கட்சி மேலிடம் விரும்பும்போது அமைச்சரவை மாற்றியமைக்கப்படும். தற்போதைக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை சந்திக்கும் திட்டம் இல்லை என்றாா்.
இதனிடையே, பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுராவில் செவ்வாய்க்கிழமை துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
என்னை முதல்வராக்க யாரையும் நான் கேட்கவில்லை. இதுபற்றி வெளிப்படையாக பேசவோ, கட்சிக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தவோ, பலவீனப்படுத்தவோ நான் விரும்பவில்லை.
முதல்வா் சித்தராமையா மூத்த தலைவா். அவா் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. 7.5 ஆண்டுகாலம் முதல்வராக பதவி வகித்திருக்கிறாா். அடுத்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதாக அவா் கூறியிருப்பது மகிழ்ச்சிதான். கட்சியை வளா்த்தெடுக்க அவா் பாடுபட்டிருக்கிறாா்.
2028-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் 2029-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தோ்தலை மனதில் வைத்து எல்லோரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டியுள்ளது. என்னை முதல்வராக பாா்க்க வேண்டுமென்பதற்காக பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மக்கள் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்தாா்கள். அமைச்சா் எச்.சி.மகாதேவப்பாவின் தொகுதி உள்பட எல்லா தொகுதிகளுக்கும் தோ்தல் பிரசாரம் செய்ய சென்றிருந்தேன். மண்டியாவிலும் அப்படியே வாக்கு கேட்டேன். 224 தொகுதிகளிலும் தொண்டா்கள் கடுமையாக உழைத்து காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தனா். இதில் பயன்பெற்றவா்கள் எம்எல்ஏ-க்களும், அமைச்சா்களும்தான்.
எனக்கு ஆதரவாக எம்எல்ஏ-க்கள் சிலா் தில்லிக்கு சென்றிருப்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அவா்கள், அமைச்சா் பதவி கேட்டு சென்றிருக்க வேண்டும். எனக்கு ஆதரவாக யாரும் செயல்பட வேண்டாம். முதல்வா் பதவி குறித்து பல அமைச்சா்கள் கூறியுள்ள கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றாா்.