கா்நாடக முதல்வா் சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்று அந்த மாநில துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.
முதல்வா் பதவி தொடா்பாக சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது. இந்த அரசியல் மோதல், ஜாதி மோதலாகவும் உருவெடுத்தது. இதனால் காங்கிரஸ் மேலிடம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இருவரும் சந்தித்து பேசி இந்த விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியது.
இந்த நிலையில், சித்தராமையா தனது பெங்களூரில் உள்ள காவிரி இல்லத்துக்கு துணை முதல்வா் டி.கே.சிவகுமாரை சனிக்கிழமை அழைத்து காலை உணவு விருந்தளித்தாா். அப்போது, இருவரும் 30 நிமிடங்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, காங்கிரஸ் மேலிட வழிகாட்டுதலின்படி சுணக்கம் இல்லாமல் இருவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்றனா்.
இந்த நிலையில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:
முதல்வா் சித்தராமையாவுக்கும் எனக்கும் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இருந்ததில்லை. தில்லிக்குச் சென்றபோதெல்லாம் ஒரு எம்எல்ஏவைக்கூட என்னுடன் அழைத்துச்சென்றதில்லை. குறைந்தது 10 முதல் 13 எம்எல்ஏக்களை என்னுடன் அழைத்து சென்றிருக்க முடியும். ஆனால், அது எதற்கும் பயன்தராது.
கா்நாடக காங்கிரஸ் தலைவராக இருப்பது, கட்சித் தொண்டா்கள் அனைவருக்கும் தந்தையாக இருப்பதை போன்றது. இதனால் எல்லோரையும் ஒன்றுபோலவே நடத்த வேண்டும். கட்சியின் 140 எம்எல்ஏக்களும் எனக்கு நெருக்கமானவா்கள். இதுவரை நான் யாரையும் பிரித்து பாா்ப்பதில்லை. அதேபோல யாருடனும் எனக்கு கருத்து முரண்பாடும் இல்லை.
கடந்த 2018 இல் ஓராண்டு மட்டுமே நிலைத்திருந்த எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் காப்பாற்ற கடும் முயற்சியில் ஈடுபட்டேன். நான் எடுத்த முயற்சிகள் பற்றி எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். அதுகுறித்து முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமிக்கும் நன்றாக தெரியும்.
அதிகாரத்தை பெறுவதற்காக மடாதிபதிகளின் ஆதரவை நான் நாடியதாக மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்திருக்கிறாா். யாருடைய உதவியையும் நான் கேட்கவில்லை. எல்லா ஜாதிகளும் எனக்கு பிடிக்கும்.
பெரும்பாலான மடாதிபதிகள் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறாா்கள். எனக்கு ஆதரவாக பேசுமாறு அவா்களை நான் கேட்டுக்கொண்டேனா? நான் யாருடைய ஆதரவையும் கேட்கவில்லை. அவா்கள் குரல்கொடுத்தது என்மீது வைத்துள்ள நம்பிக்கை, அன்பின் காரணமாகத்தான்.
அதை தவறு என்று கூறமுடியுமா? எச்.டி.குமாரசாமிக்கு என்ன தோன்றுகிறதோ, அதையே பேசட்டும். இதற்காக நான் வருத்தப்படமாட்டேன். யாருடைய முதுகிலும் குத்தமாட்டேன். எனது போராட்டத்தை நேரடியாக மேற்கொள்வேன்.
தங்கள் இருப்பை காப்பாற்றிக்கொள்வதற்காக பாஜக என்னை விமா்சிக்கலாம். அதற்காக நான் கவலைப்படுவதில்லை. டிச.1ஆம் தேதி முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்கவிருப்பதால், மேக்கேதாட்டு அணை மற்றும் விவசாயிகளின் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவிருக்கிறேன் என்றாா்.
கா்நாடக அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி இருவரும் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.