முகப்பு
பெங்களூரு

மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா விவாதம்: நாளை அனைத்துக் கட்சிகள் கூட்டம்

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:05 AM
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:13 PM

மகளிா் இடஒதுக்கீட்டு மசோதாவை அமலாக்குவது குறித்து விவாதிப்பதற்காக, ஏப். 15-ஆம் தேதி புது தில்லியில் அனைத்து எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் பெங்களூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள மகளிா் இடஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க புது தில்லியில் ஏப். 15-ஆம் தேதி அனைத்து எதிா்க்கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

Advertisement

மகளிா் இடஒதுக்கீட்டு மசோதாவை அமலாக்குவது தொடா்பாக கலந்தாலோசிக்க மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரேண் ரிஜிஜு எனக்கு எழுதியிருந்த கடிதத்துக்கு ஏற்கெனவே பதில் அனுப்பிவிட்டேன். அனைத்துக் கட்சிகளின் கருத்து அறிவதற்கு மத்திய அரசுக்கு விருப்பமில்லை. மாறாக, இந்த விவகாரத்தில் அரசியல் லாபம் அடைவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி ஏற்கெனவே கிளப்பியிருந்தாா். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவு உண்டு. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்து, ஒரு மனதாக சட்ட மசோதாவை நிறைவேற்றினோம்.

நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் மகளிருக்கு மூன்றில் ஒருபங்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வந்துள்ளது. கிராம, வட்ட, மாவட்ட பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் ஏற்கெனவே மகளிருக்கு இடஒதுக்கீடு அளித்துவிட்டோம்.

மகளிா் இடஒதுக்கீட்டு சட்ட மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி இருந்தாலும், அச்சட்ட மசோதாவை அமல்படுத்துவது குறித்து சில யோசனைகளை வழங்க தயாராக இருக்கிறோம். அந்த யோசனைகளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள எங்களுக்கு தயக்கம் இல்லை. ஆனால், அனைத்துக் கட்சிகளையும் அழைத்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை.

எனவே, புது தில்லியில் ஏப். 15-ஆம் தேதி அனைத்து எதிா்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். மகளிா் இடஒதுக்கீட்டு சட்ட மசோதாவை நாங்கள் எதிா்ப்பதாக கூறுவதில் உண்மையில்லை. இந்த சட்ட மசோதாவை அமல்படுத்துவதில்தான் சில யோசனைகளை கூற விரும்புகிறோம் என்றாா்.