மானிய உர ஏற்றுமதியில் பல ஆயிரம் கோடி மோசடி?
திருவொற்றியூர், ஆக. 20: விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானிய விலை உரங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து இப்போது தகவல்கள் வெளியாகிவர
சென்னைமானிய உர ஏற்றுமதியில் பல ஆயிரம் கோடி மோசடி?
திருவொற்றியூர், ஆக. 20: விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானிய விலை உரங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து இப்போது தகவல்கள் வெளியாகிவர
திருவொற்றியூர், ஆக. 20: விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானிய விலை உரங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து இப்போது தகவல்கள் வெளியாகிவருகின்றன.
யூரியாவுக்கு அடுத்து பொட்டாஷ்தான் அதிக அளவில் உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ஓராண்டு பொட்டாஷ் தேவை ஒரு கோடி டன்னுக்கும் அதிகம்.
கனிமப் பொருளான பொட்டாஷ் இந்தியாவில் கிடைக்காததால் தான்சானியா, பெலாரூஸ் (ரஷ்யா), எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது.
இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் (ஐபிஎல்) என்ற அரசுத்துறை நிறுவனம் போட்டாஷை அதிக அளவில் இறக்குமதி செய்து உர ஆலைகளுக்கு விநியோகம் செய்கிறது. உர ஆலைகள், போட்டாஷ் கலப்பு உரங்களைத் தயாரிக்கின்றன. பின்னர் அவை விநியோக முகவர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இதனை வாங்கி விநியோகிக்கும் முகவர்கள் பல்வேறு விவசாயக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்கின்றனர். நாடு முழுவதும் இதே முறைதான் கையாளப்படுகிறது.
25 ஆயிரம் கோடி மானியம்: இப்போது ஒரு டன் பொட்டாஷ் சுமார் ரூ. 31 ஆயிரத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு ஒரு டன் ரூ.4,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நஷ்டம் ஏற்படும் ரூ. 26 ஆயிரத்தை மானியமாக உர ஆலைகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது. பொட்டாஷ் வகை உரங்களுக்கு மட்டும் 2008-ல் ரூ.20 ஆயிரம் கோடியும், 2009-ல் சுமார் ரூ.25 ஆயிரம் கோடியும் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக உர அமைச்சக வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி:இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொட்டாஷ் கடந்த 18 மாதங்களாக, 'இண்டஸ்டிரியல் சால்ட்' என்ற பெயரில் மலேசியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, தூத்துக்குடி, மும்பை, பாரதீப், விசாகபட்டினம் உள்ளிட்ட பெரும்பாலான இந்தியத் துறைமுகங்கள் மூலமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொட்டாஷ் ஏற்றுமதிக்குத் தடை இருக்கும் நிலையில், சுங்கத் துறையினரின் கண்களில் மண்ணைத் தூவி கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.
சென்னை மற்றும் தூத்துக்குடியில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி சுங்கத்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள் 'இண்டஸ்ட்ரியல் சால்ட்' அல்ல, மேலும் அப்படி ஒரு பொருளே கிடையாது என்று தெரிய வந்தது. ஆய்வகப் பரிசோதனையில் அது இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாஷ்தான் என்பதும் நிரூபணம் ஆகியது. இதனை அடுத்து 4 ஏற்றுமதியாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து சென்னை சுங்கத்துறை ஆணையர் சி.ராஜன் கூறியது:
'இன்டஸ்டிரியல் சால்ட்' என்ற பெயரில் அதிக அளவில் திடீரென ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தினோம். அப்போதுதான் "பொட்டாஷ்' ஏற்றுமதி செய்து மோசடி செய்துள்ள விவரம் தெரிந்தது.
பெங்களூரை மையமாக வைத்துதான் பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். இது குறித்து நடத்திய விசாரணையில் அவர்களுக்கு யாரோ சிலர் இதற்கான ஆர்டர்கள் தந்துள்ளனர்.
இதர விவரங்கள் யாரிடமும் இல்லை. மும்பையிலிருந்து வந்த "இன்வாய்ஸ்' பில் குறித்து அதனை அனுப்பியவரிடம் கேட்டபோது, ""எனக்கு ஏதும் தெரியாது, அமித் என்ற ஒருவர் இவ்வாறு பில் தந்தால் அதில் ஒரு சதவீதம் கமிஷன் தருவதாகக் கூறியதால் பில் தந்தேன், பொட்டாஷ் குறித்து எனக்கு ஏதும் தெரியாது'' எனக் கூறிவிட்டார்.
நாங்களும் பல்வேறு தரப்பிலும் விசாரித்து வருகிறோம். இதில் கூட்டாளியாகச் செயல்பட்டவர்கள் குறித்து விவரம் தெரியவில்லை. தீவிர விசாரணை நடத்தினால் மட்டுமே மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய முடியும். இப்போது 1,300 டன் பொட்டாஷைப் பறிமுதல் செய்துள்ளோம்.
மேலும் மலேசிய சென்ற 60 கன்டெய்னர் சரக்கை துறைமுகங்களில் நிறுத்தி திருப்பி அனுப்பக் கோரி உள்ளோம் என்றார்.
பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி?இது குறித்து சுங்கத் துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:
'இன்டஸ்டிரியல் சால்ட்' என்ற பெயரில் வாரந்தோறும் சுமார் ஆயிரம் கன்டெய்னர்கள் அளவிற்கு சென்னையில் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மற்ற துறைமுகங்களிலும் இதேபோல் ஏற்றுமதி நடந்துள்ளது. பொட்டாஷ் ஏற்றுமதி மூலம் பலர் கோடிக் கணக்கில் பயன் பெற்றுள்ளனர்.
ஏற்றுமதி செய்ய சம்மதம் தெரிவித்தால் அடுத்த நிமிடமே இதற்கான ஆர்டர்கள் கைவசம் வந்துவிடும். யார் அனுப்பியது என்பதே ஏற்றுமதியாளர்களுக்குத் தெரியாத வகையில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
டன் ரூ.31 ஆயிரத்திற்கு இறக்குமதியாகும் பொட்டாஷ், ரூ.23 ஆயிரத்துக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொட்டாஷிக்கு ரூ.26 ஆயிரம் வழங்கப்படும் மானியத்தைப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது. அதாவது, உரமாக விவசாயிகள் வாங்கியதுபோல் போலி ஆவணங்கள் தயாரித்து (உண்மையில் விநியோகிக்காமல்) பல ஆயிரம் கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளது அம்பலம் ஆகி உள்ளது.