திருத்தணி, ஜூலை 22: திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களின் வசதிக்காக இலவச தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியை இந்து அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு வரும் வெளியூர் பக்தர்கள் பல ஆண்டுகளாக தங்கும் விடுதிகட்ட வேண்டும் என கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கயை ஏற்ற கோயில் நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் தங்கும் விடுதி கட்டும் பணியைத் தொடங்கியது. கோயில் நிதி மற்றும் சுற்றுலாத்துறை நிதி மூலம் ரூபாய் 50-லட்சம் செலவில் தங்கும் விடுதி கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் சாட்டர்ஜி தலைமை வகித்தார். முருகன் கோயில் இணை ஆணையர் மா. கவிதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இந்து அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கலந்துகொண்டு பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் சண்முகநாதன் பேசியது: தமிழக முதல்வராக 3-வது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்து வருகிறார். இந்து அறநிலையத் துறை ஆய்வின்போது தமிழக்ததில் உள்ள எந்த கோயிலாக இருந்தாலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனக்கூறியுள்ளார். குறிப்பாக குடிநீர், கழிப்பிடம், தங்கும் விடுதி போன்ற வசதிகளை பக்தர்களுக்கு செய்துதர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட வசதிகள் இல்லாத கோயில்களை கண்டறிந்து விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். சனிக்கிழமை தொடங்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது. விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பி.வி. ரமணா, எம்.எல்.ஏ.க்கள் வி. சோமசுந்தரம் (அதிமுக), மு. அருண்சுப்பிரமணியன் (தேமுதிக), முன்னாள் அரசு கொறடா பி.எம். நரசிம்மன், முன்னாள் எம்.எல்.ஏ. கோ. அரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.