காண்போரை கவரும் கண்ணாடி ஓவியங்கள்
திருவள்ளூர், ஜூன் 23: காண்போரை கவரும் வகையில் கண்ணாடி ஓவியங்கள், ஆரத்தி தட்டுகளை வடிவமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் திருவள்ளூர் பெருமாள்பட்டைச் சேர்ந்த நிர்மலா. ÷ஆண்களுக்கு நிகராக
திருவள்ளூர், ஜூன் 23: காண்போரை கவரும் வகையில் கண்ணாடி ஓவியங்கள், ஆரத்தி தட்டுகளை வடிவமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் திருவள்ளூர் பெருமாள்பட்டைச் சேர்ந்த நிர்மலா.
÷ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். குறிப்பாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்ட பின் பெண்கள் தங்கள் சொந்த கால்களிலேயே நின்று வருவாய் ஈட்டி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலும் மகளிர் திட்டம் மூலம் பெண்கள் பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.
÷பெருமாள்பட்டு ஸ்ரீராம் கல்லூரி அருகே செல்லியம்மன் நகரில் வசிப்பவர் நிர்மலா. இவரது கணவர் சங்கர் முன்னாள் ராணுவ வீரர். கண்ணாடி ஓவியங்கள், ஆரத்தி தட்டுகள் செய்வது, பல்வேறு கைத்தொழில்களில் திறன்மிகுந்தவராக உள்ளார் நிர்மலா. குறிப்பாக கண்ணாடியில் சுவாமி ஓவியங்கள், இயற்கை காட்சிகள் போன்றவற்றை வரைந்து பல்வேறு கண்காட்சிகளில் வைத்துள்ளார். கண்ணாடி ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு கண்ணாடி ஓவியம் ரூ.500 வரை விற்பனையாகிறது.
ஆரத்தி தட்டுகள்
÷இப்போது திருமண வரவேற்பு, நிச்சயதார்த்தம் உள்பட பல்வேறு விழாக்களில் வரவேற்பு பகுதியில் அழகான ஆரத்தி தட்டுகள் வைக்கப்படுகின்றன. ஆரத்தி தட்டுகள் வடிவமைப்பிலும் நிர்மலா சிறந்து விளங்குகிறார். சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆரத்தி தட்டுகளை வாடகைக்கு தந்து வருவாய் ஈட்டுகிறார்.
"ஆதரவு கிடைக்கிறது'
நான் கைத்தொழில் கற்று அரசு சான்றிதழ் பெற்றுள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக கண்ணாடி ஓவியங்களை வரைந்து வருகிறேன். இதற்கான மூலப்பொருள்களை சென்னையில் வாங்கி வருகிறேன். ஒரு நாளைக்கு ஒரு கண்ணாடி ஓவியம்தான் வரைய முடியும்.
கண்ணாடியின் பின்புறத்தில்தான் வரைய வேண்டும். அதன்பின் பாதுகாப்புக்கு பிரேம் செய்து விற்கப்படும். எம்போஸ் ஓவியம் ரூ.350-க்கும், கண்ணாடி ஓவியம் ரூ.500 வரையும் விற்பனையாகிறது. மேலும் வெளிநாட்டினரும் ஆர்வமுடன் வந்து வாங்குகின்றனர்.
ஆரத்தி தட்டுகளையும் வடிவமைத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுப்பிவைக்கிறேன்.
இதன் மூலம் மாதம் ரூ.5 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது. எனது மகள் உதவியாக இருந்தார். அவர் திருமணமாகி சென்றுவிட்டதால் நானே இவற்றை செய்து வருகிறேன்.
இளம்பெண்களுக்கு கண்ணாடி ஓவியங்கள் வரைதல், ஆரத்தி தட்டுகளை வடிவமைத்தல் போன்றவற்றையும் கற்றுத்தர ஆர்வமாக உள்ளேன். மகளிர் திட்டம் மூலம் எனக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார் நிர்மலா.