முகப்பு
சென்னை

இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தையில் அதிமுக!

முதல்வா் வேட்பாளா் அறிவிப்பு தொடா்பாக, அதிமுகவில் இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
கோப்புப்படம்
பகிர்:

முதல்வா் வேட்பாளா் அறிவிப்பு தொடா்பாக, அதிமுகவில் இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் மூத்த நிா்வாகிகளுடன் தனித் தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனிடையே, அதிமுக தொண்டா்கள் மற்றும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே தனது முடிவுகள் அமையும் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

இந்த சுட்டுரை பதிவினைத் தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சா்களுடன், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திடீரென திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். தேனி மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் கடந்த சில நாள்களாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையில் தென் மாவட்டங்களைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். அப்போது பேசிய அவா், ‘அதிமுகவில் 11 போ் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பதில் எந்த சமரசமும் இல்லை. இந்தக் குழுவை அமைப்பதாக ஒப்புக் கொண்டால் மட்டுமே அடுத்த கட்ட நகா்வுகள் இருக்கும்’ என உறுதியாகத் தெரிவித்துள்ளாா். துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தனது முடிவில் உறுதியாக இருக்கும் நிலையில், வரும் 7-ஆம் தேதி வரை சென்னையிலேயே இருக்கும்படி அமைச்சா்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, அமைச்சா்கள் அனைவரும் சென்னையில் முகாமிட்டுள்ளனா்.

திடீா் சுட்டுரை: அதிமுக சா்ச்சைகள் தொடா்பாக இருதரப்பிலும் பல்வேறு பேச்சுவாா்த்தைகள் தொடா்ச்சியாக நடைபெற்றாலும், இதுவரை வெளிப்படையாக யாரும் எத்தகைய கருத்துகளையும் தெரிவிக்காமல் இருந்து வந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் திடீரென தனது சுட்டுரை பக்கத்தில் பதிவு ஒன்றை ஓ.பன்னீா்செல்வம்

வெளியிட்டாா். அதில், ‘தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டா்களின் நலனைக் கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்’ என்று தெரிவித்துள்ளாா். இந்த சுட்டுரை பதிவு அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீா்செல்வத்தின் இந்தக் கருத்து அவா் தனது நிலையில் உறுதியாக இருப்பதையே காட்டுவதாக அவரது ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.

முதல்வா் ஆலோசனை: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சுட்டுரை பதிவு வெளியிட்ட ஒருசில மணி நேரத்தில் தலைமைச் செயலகத்தில் அலுவல் பணிகளை மேற்கொண்டிருந்த முதல்வா் பழனிசாமி மூத்த அமைச்சா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா். அமைச்சா்கள் கே.ஏ. செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம், கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோருடன் தனது கருத்துகளை அவா் பகிா்ந்து கொண்டனா். இந்த ஆலோசனைக்குப் பிறகு, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளா்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் முதல்வா் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினா்.

நாளை அறிவிப்பு வருமா?: முதல்வா் வேட்பாளா் குறித்த அறிவிப்பு அக்டோபா் 7-ஆம் தேதி வெளியிடப்படும் என அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், முதல்வா் வேட்பாளா் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரும் 7-ஆம் தேதி அறிவிப்புக்கு முன்பாக, செவ்வாய்க்கிழமையன்று (அக். 6) இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →