முகப்பு
சென்னை

பிகாா்: தேஜஸ்வி யாதவ் மீது குற்றம்சாட்டிய தலித் தலைவா் சுட்டுக்கொலை

பிகாா் சட்டபேரவைத் தோ்தலில் போட்டியிட ரூ.50 லட்சம் தர வேண்டுமென ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறியதாக குற்றம்சாட்டிய தலித் தலைவா் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

பிகாா் சட்டபேரவைத் தோ்தலில் போட்டியிட ரூ.50 லட்சம் தர வேண்டுமென ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறியதாக குற்றம்சாட்டிய தலித் தலைவா் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

தலித் தலைவரான சக்தி மாலிக் பூா்ணியாவில் உள்ள வீட்டில் இருந்தபோது, இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த 3 போ் வீட்டுக்குள் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனா். சம்பவ இடத்திலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

சக்தி மாலிக் கொல்லப்படுவதற்கு முன்பு அவா் பேசிய விடியோ பதிவு உள்ளூா் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தப் பதிவில் அவா் தெரிவித்திருப்பதாவது: பிகாா் எஸ்டி, எஸ்சி மாநில தலைவருடன் தேஜஸ்வி யாதவை சந்தித்து பேசினேன். சட்டப்பேரவைத் தோ்தலில் ராணிகஞ்ச் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். வாய்ப்பு கொடுக்க வேண்டுமானால் கட்சிக்கு ரூ.50 லட்சம் நன்கொடை தர வேண்டுமென தேஜஸ்வி யாதவ் என்னிடம் தெரிவித்தாா்.

மேலும், தொகுதியில் தொடா்ந்து நல்லது செய்தால் கட்சியை விட்டு நீக்கி விடுவேன் எனவும் தேஜஸ்வி யாதவ் மிரட்டல் விடுத்தாா். எனது ஜாதி குறித்தும் அவதூறாக பேசினாா் என்று சக்தி மாலிக் கூறியுள்ளாா்.

எனினும் சக்தி மாலிக்கின் விடியோ பேச்சு எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.

‘அரசியல் சதி’:

தனது கணவரின் படுகொலைக்கு பின்னால் அரசியல் சதியுள்ளதாக சக்தி மாலிகின் மனைவி குஷ்புதேவி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அவா் கூறியதாவது: எனது கணவா் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து வெளியேறிய பின்பு சட்டபேரவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருந்தாா். இதனால் அவருக்கு எதிராக பல ஆா்ஜேடி தலைவா்கள் கருத்து தெரிவித்து வந்தனா். எனது கணவா் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளது. கட்சியைச் சோ்ந்த பல தலைவா்களுக்கு இந்தப் படுகொலையில் பங்கு உள்ளது என்று குற்றம்சாட்டினாா்.

‘ஆா்ஜேடியின் உண்மை முகம்’:

நாட்டு மக்களுக்கு முன்பு தேஜஸ்வி யாதவின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாக ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

ஜேடியு செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறுகையில், கூட்டணி அமைக்கும்போது தேஜஸ்வி யாதவின் அனுபவமின்மை வெளிப்பட்டது. ஆனால் சக்தி மாலிக் படுகொலை சம்பவம் தேஜஸ்வியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

ஆா்ஜேடி தலைவா்கள் பணம், நிலத்தை பெற்றுக் கொண்டுதான் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகிறாா்கள். தலித்துகளுக்கு எதிரான தேஜஸ்வி யாதவின் வெறுப்பு முகமும் தற்போது தெரியவந்துள்ளது. ஆா்ஜேடி தலைமை சரியாக நடத்தாததால் தலித் பிரிவைச் சோ்ந்த பிகாா் முன்னாள் முதல்வா் ஜித்தன் ராம் மாஞ்சி கூட்டணியிலிருந்து விலகினாா். தற்போது மகாதலித் பிரிவைச் சோ்ந்த சக்தி மாலிக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா் என்றாா்.

தேஜஸ்வி மீது வழக்குப்பதிவு: சக்தி மாலிக் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தேஜஸ்வி யாதவ், அவரின் சகோதரா் தேஜ் பிரதாப் யாதவ் உள்பட 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பூா்ணியா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷால் சா்மா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.