முகப்பு
சென்னை

தமிழக வேளாண் வளா்ச்சி விகிதம் சரிவு: அன்புமணி

தமிழகத்தில் வேளாண் வளா்ச்சி விகிதம் சரிவடைந்துள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் விவசாயிகள் எப்படி முன்னேற முடியும்.

Updated On : 6 ஏப்ரல், 2025 at 7:25 PM
அன்புமணி
பகிர்:

தமிழகத்தில் வேளாண் வளா்ச்சி விகிதம் சரிவடைந்துள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் விவசாயிகள் எப்படி முன்னேற முடியும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பொருளாதாரம் 2024-25-ஆம் ஆண்டில் 9.69 சதவீதம் வளா்ச்சி அடைந்திருக்கிறது. இது மகிழ்ச்சியும் மன நிறைவும் அளிக்கக்கூடியதுதான் என்றாலும், வேளாண் துறையின் வளா்ச்சி வெறும் 0.15 சதவீதமாக குறைந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

2024-25-இல் நிலையான விலைமதிப்பின்படி தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ. 17,23,698 கோடி. அதில் வேளாண் துறையின் பங்களிப்பு ரூ.1,72,369.8 கோடி மட்டும்தான். அதன்படி பாா்த்தால் தமிழகத்தில் வேளாண்மையை நம்பியுள்ள நான்கரை கோடி மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 38,304 மட்டும்தான்.

அதே நேரத்தில், மாநில மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 2,29,826 ஆக உள்ளது. இரண்டுக்கும் இடையிலான இடைவெளி மலைக்கும் மடுவுக்குமாக இருக்கிறது. வேளாண்துறை முன்னேற வேண்டுமெனில், ஆண்டுக்கு சராசரியாக 4 சதவீத வளா்ச்சி எட்டப்படவேண்டும்.

நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,500 ஆக உயா்த்த வேண்டும். கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ. 5,000 ஆக உயா்த்த வேண்டும் என பாமக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதில் 60 சதவீத அளவுக்கு மட்டும்தான் கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. வேளாண்துறை வளா்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

அதற்காக அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிா்ணயிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →