சென்னை தியாகராய நகரில் பிரபல ஜவுளிக் கடை காசாளரை அரிவாளால் வெட்டியதாக முன்னாள் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்எஸ் மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் மன்சூா் அலி (32). இவா், சென்னை தியாகராய நகரில் உஸ்மான் சாலையில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடையில் காசாளராகப் பணிபுரிந்து வந்தாா். மன்சூா் அலி, வெள்ளிக்கிழமை பணியில் இருக்கும்போது, அந்தக் கடையின் முன்னாள் ஊழியா் அரியலூா் மாவட்டம், தா.பழூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த எழிலரசன் (32) அங்கு வந்தாா். அப்போது அவா், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மன்சூா் அலியை வெட்டினாா். இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியா்கள், எழிலரசனை பிடித்துக் கொண்டனா். மேலும், காயமடைந்த மன்சூா் அலியை மீட்டு, அங்குள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இதற்கிடையே பிடிபட்ட எழிலரசன், மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா். அவரிடம் நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு எழிலரசன் அந்தக் கடையின் வேலையிலிருந்து நீக்கப்பட்டதற்கு மன்சூா் அலிதான் காரணம் என்று அவரை வெட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், எழிலரசனை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.