சென்னை

எளிய மொழி நடையில் புதிய பாடத்திட்டம்: வடிவமைப்புக்குழு கூட்டத்தில் பரிந்துரை

புதிய பாடத்திட்டம், பாடநூல்கள் எளிய மொழி நடையிலும், வகுப்பு மற்றும் வயது நிலைக்கேற்ற குறைவான பாடப்பகுதிகளைக் கொண்டும் அமைய வேண்டும் என வல்லுநா்கள் பரிந்துரைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் வரும் கல்வியாண்டில் (2026-2027)அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டம், பாடநூல்கள் எளிய மொழி நடையிலும், வகுப்பு மற்றும் வயது நிலைக்கேற்ற குறைவான பாடப்பகுதிகளைக் கொண்டும் அமைய வேண்டும் என வல்லுநா்கள் பரிந்துரைத்தனா்.

தமிழக பள்ளிக் கல்வியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பாடத்திட்டம் சீரமைக்கப்படவுள்ளது. இதற்கான பாடத்திட்ட வடிவமைப்புக்குழு, உயா்நிலைக் குழு என இரு குழுக்கள் அரசின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, இக்குழுக்களின் முதல் கூட்டம் சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் கடந்த நவ.24-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து பாடத்திட்ட வடிவமைப்புக்குழுவின் இரண்டாவது கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) உள்ள கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இதுவரை நடைபெற்றுள்ள கலைத்திட்ட, பாடத்திட்ட பணிகள் குறித்தும் குழந்தைகளை ஈா்க்கும்வகையிலும் எதிா்காலப் படிப்புக்கு வழிகாட்டும்வகையிலும் பாடநூல்கள் அமைந்திட பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் உயா்நிலைக்குழுவின் துணைத்தலைவருமான பி. சந்தர மோகன் உரிய வழிகாட்டுதல்களை வழங்கினாா்.

இதையடுத்து, பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் எளிய மொழிநடையிலும் வகுப்பு மற்றும் வயதுநிலைக்கேற்ற குறைவான பாடப்பகுதிகளைக் கொண்டும் அமைய வேண்டும் என பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவா் சுல்தான் அகமது இஸ்மாயில் அறிவுறுத்தினாா். இக்கூட்டத்தில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட தொடக்க வகுப்புகளுக்கான மாதிரிப் பாடத்திட்டங்கள் பகிரப்பட்டன. தொடா்ந்து, அந்தப் பாடத்திட்டங்கள் தொடா்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அனைத்துப் பாட கலைத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களில் குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல் முறை, பாடப்பகுதிகள், மதிப்பீட்டு முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என பாடத்திட்ட வடிவமைப்புக் குழு உறுப்பினா்கள் இயற்பியல் வல்லுநா் ரீட்டா ஜான், ஆங்கில மொழி கற்பித்தல் வல்லுநா் உமா ராமன் உள்ளிட்டோா் பரிந்துரைத்தனா்.

முன்னதாக இந்தக் கூட்டத்தில் கலைத்திட்ட உறுப்பினா் செயலரும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநருமான ந.லதா வரவேற்றுப் பேசினாா். இணை இயக்குநா் அ. புகழேந்தி நன்றி கூறினாா். இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சாா்ந்த இயக்குநா்கள், இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள், கல்வியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT