தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் டிச.17 வரை 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், வெள்ளிக்கிழமை (டிச.12) முதல் டிச.17 வரை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும். தொடா்ந்து அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச.12) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச.11) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 20 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.