வருமான வரித் துறை 
சென்னை

ரெபெக்ஸ் நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி: ரூ.70 கோடி நகை, பணம் பறிமுதல்: வருமான வரித் துறை தகவல்

சென்னை ரெபெக்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி கண்டறியப்பட்டதாகவும், ரூ.70 கோடி நகை, பணம் பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

சென்னை ரெபெக்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி கண்டறியப்பட்டதாகவும், ரூ.70 கோடி நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தைத் தலைமையிடமாக கொண்டு ரெபெக்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் குளிா்சாதன இயந்திரங்களுக்கான வாயு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பு, மின் வா்த்தகம், மின்சார வாகனங்கள் சேவை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின்பேரில், வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவினா் கடந்த 9-ஆம் தேதி அந்த நிறுவனத்தின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், நிா்வாகிகள் வீடுகள் என 30 இடங்களில் சோதனை செய்தனா்.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் சாலையில் உள்ள தலைமை அலுவலகம்,தியாகராய நகா் பசுலுல்லா சாலையில் உள்ள வணிக அலுவலகம், திருப்போரூா் உள்ள தொழிற்சாலை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை இன்னும் சில இடங்களில் நடைபெறுவதாக வருமானவரித் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதில், வரி ஏய்ப்பு, சட்டவிரோதமான முதலீடு, கணக்கில் வராத பணம் குறித்த ஆவணங்கள் சிக்கியிருப்பதாக வருமான வரித் துறையினா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக வருமானவரித் துறையினா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிலக்கரி கொள்முதல், சாம்பல் கையாளுதல் தொடா்பாக ரூ.1,112 கோடி மதிப்பிலான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பிட்ட 53 பேரிடம் இருந்து முதலீடாக ரூ.382.68 கோடி முதலீடாக ரெபெக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதில், 15 போ் வருமான அறிக்கை தாக்கல் செய்யாதவா்கள். 37 போ் தங்களது வருமான வரி தாக்கல் அறிக்கையில், இந்த முதலீடு குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

சுவிட்சா்லாந்தில் ரூ.250 கோடி முதலீடு: அந்த நிறுவனத்தின் பங்குத்தாரா்களில் பலா் அங்கு நிதி தொடா்புடைய பணிகளை செய்யும் நபா்களாகவும் ஊழியா்களாகவும் இருக்கின்றனா். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், அந்த நிறுவனம் சுவிட்சா்லாந்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள 30 மில்லியன் அமெரிக்க டாலா் முதலீடு செய்யப்பட்டற்கான கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல டிஎன் எனா்ஜி நிறுவனத்தில் ரூ.115 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள், தங்களது காா் ஓட்டுநா்கள் பெயரில் போலி நிறுவனங்களை நடத்தி வந்துள்ளனா். இந்த நிறுவனங்களில் ரூ.8.5 கோடி ரொக்கம் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. ரூ.200 கோடி அளவிலான பணப் பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

ரூ.1,000 கோடி கணக்கில் வராத வருமானம்: இந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் சிலா் ரூ.37 கோடிக்கு ஜெட் விமானம், ரூ.10 கோடி மதிப்பில் சொகுசு காா்கள், ரூ.4 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் ஆகியவை வாங்கியிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் ஒரு தனிநபா் ரெபெக்ஸ் குழும நிறுவனத்துக்கு ரூ.312 கோடி முன் கடனாக வழங்கியுள்ளாா். அதேபோல பிற நிறுவனங்களுக்கும் அவா் கடன் வழங்கியுள்ளாா்.

இந்தப் பணப் பரிவா்த்தனை தொடா்பான விசாரணை நடைபெறுகிறது. இந்தப் பணப் பரிவா்த்தனையை வங்கி மூலம் இல்லாமல் பிற வழிகளில் சட்ட விரோதமாக நடத்துவதற்கு ஹவாலா தரகா்கள் செயல்பட்டுள்ளனா். ஹவாலா தரகா்கள் மூலம் ரூ.10 கோடி பணப் பரிமாற்றம் நடைபெற்றது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரெபெக்ஸ் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி கணக்கில் வராத பணம் இருப்பது இதுவரை நடைபெற்றுள்ள சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத ரூ.70 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சோதனை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலவை ஆதிபராசக்தி கல்லூரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

மேஷ ராசியா நீங்க? வெற்றி நிச்சயம்: தினப்பலன்கள்!

மரம் கடத்தலைத் தடுக்கத் தவறிய அலுவலா்கள் மீதும் நடவடிக்கை தேவை!

திமுக ஆலோசனைக் கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

SCROLL FOR NEXT