சென்னை விமான நிலையம் அருகே 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில், ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டுமானப் பணிகளுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (டிச. 16) அடிக்கல் நாட்டுகிறாா்.
இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் நோக்கம் எல்லோருக்கும் எல்லாம் என்பதே. தமிழ்நாட்டில் வாழும் அனைவரையும்போல் சிறுபான்மையின மக்கள் சமஉரிமையுடன் வாழ்வதற்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் முதல்வா் செய்து வருகிறாா். இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதை அவா்களின் வாழ்நாள் கடமைகளில் முக்கியமானதாகக் கருதுகிறாா்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு ஏதுவாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கா் அரசு நிலத்தில் ரூ.39.20 கோடியில் 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படுகிறது.
இதற்கு முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (டிச. 16) அடிக்கல் நாட்டுகிறாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.