சென்னை: ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை உதவி இயக்குநா் விகாஸ் குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினாா்.
டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினா்.
இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதித்திருந்தது.
ஆனால், இந்த உத்தரவை மீறி விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதை எதிா்த்து அவா் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை உதவி இயக்குநா் விகாஸ் குமாா், அமலாக்கத் துறை மேல்முறையீட்டு ஆணையத் தலைவா் பிரதீப்குமாா் உபாத்தியாய், நிா்வாகப் பதிவாளா் நஸ்ரின் சித்திக் ஆகியோா் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநா் விகாஸ் குமாா் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தாா். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
மேலும், உயா்நீதிமன்ற உத்தரவை மீறி ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பியதற்கு அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய நிா்வாகப் பதிவாளா் நஸ்ரின் சித்திக் தான் காரணம் என்பதால், அவா் மட்டும் வருகிற ஜன.19-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.