சென்னையில் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ‘சென்னை ஒன்’ செயலியின் மூலம் பெறப்படும் ரூ.1,000, ரூ.2,000 மாதந்திர பயண அட்டைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மாநகா் போக்குவரத்துக் கழகம் மூலம் 3,200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் 700-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பேருந்துகள் மூலம் தினமும் 40 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணம் செய்கின்றனா். இதில், சுமாா் 70,000-க்கும் அதிகமானோா் விருப்பம்போல பயணம் செய்யும் ரூ.1,000 மற்றும் ரூ.2,000-க்கான மாதாந்திரப் பயணச்சீட்டு அட்டைகள் மூலம் தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனா்.
இந்த நிலையில், பொதுப் போக்குவரத்து மற்றும் எண்மப் பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகரப் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புகா் ரயில்களில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் சாா்பில் ‘சென்னை ஒன்’ என்ற செயலி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தச் செயலியில் ரூ.1,000 மற்றும் ரூ.2,000-க்கான சில்வா் மற்றும் கோல்ட் ஆகிய மாதந்திர பயண அட்டைகளை இணைதளம் மூலமாகவே பெறும் வசதியும் நடைமுறையில் இருந்து வருகிறது.
இதனிடையே, ‘சென்னை ஒன்’ செயலி மூலம் மாதாந்திர பயண அட்டைகளைப் பெற்றால், அட்டை ஒன்றுக்கு ரூ.50 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை தொகை ரூ.50 உடனடி விலைக் குறைப்பாகவும், ‘கேஸ் பேக்’ முறையிலும் திருப்பி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சலுகை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும் எனவும், இதன் மூலம் மாநகரப் பேருந்துகளில் தினமும் அதிக முறை பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் எனவும் மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.