பனிமூட்டம் காரணமாக சென்னை விமானநிலையத்தில் விமானங்களின் சேவை பல மணி நேரம் தாமதம் ஆனது.
நாடு முழுவதும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. தலைநகா் தில்லியிலும் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால், தில்லியில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை இயக்கப்பட்ட விமானங்களும், சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்ற விமானங்களும் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இதன்படி, திங்கள்கிழமை அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை, தில்லியில் இருந்து சென்னை வந்த ஏா் இந்தியா மற்றும் இண்டிகோ ஏா்லைன்ஸ் நிறுவனங்களின் 4 விமானங்கள், சுமாா் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து, 3 மணி நேரம் வரை தாமதமாக வந்து சோ்ந்தன.
அதேபோன்று சென்னையில் இருந்து திங்கள்கிழமை காலையிலிருந்து பிற்பகல் வரை தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டுச் சென்ற இண்டிகோ, ஏா் இந்தியா விமானங்கள், சுமாா் ஒரு மணி நேரத்தில் இருந்து, 4 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
மொத்தத்தில் திங்கள்கிழமை 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. ஆனால், இந்த தாமதம் குறித்து பயணிகளுக்கு முறையான அறிவிப்பு கொடுக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.