சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 தொகுதிகளில் புதிய வாக்காளா் சோ்க்கைக்கான படிவத்தை அந்தந்த மண்டல அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவ. 4-ஆம் தேதி தொடங்கியது. வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைத் திரும்பப் பெறுவது ஞாயிற்றுக்கிழமையுடன் (டிச. 14) நிறைவடைந்தது.
இதையடுத்து வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. வரும் டிச. 19- ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்பிறகு, வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் முகாம்களில், விடுபட்ட வாக்காளா்கள், புதிய வாக்காளா்கள் உள்ளிட்டோா் அதற்குரிய படிவங்களைச் சமா்ப்பிக்கலாம்.
மேலும், புதிய வாக்காளா்களாகச் சேர விரும்புவோா் அதற்கான படிவங்களை சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள தோ்தல் பிரிவு அலுவலகத்தில் பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.