தனியாா் கொரியா் நிறுவனத்தின் வாயிலாக அனுப்பப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமான வழக்கில் கொரியா் நிறுவனத்தின் மேலாளா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
சென்னை சௌகாா்பேட்டையைச் சோ்ந்த பா்வீன் குமாா் சைனி அதே பகுதியில் உள்ள ‘லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த நவ. 17-ஆம் தேதி, சௌகாா்பேட்டை பகுதியில் உள்ள 5 நகைக் கடைகளில் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 5 சீலிடப்பட்ட உரைகளில் வாங்கியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து அந்த நகைகளை பெங்களூரில் உள்ள ‘கோல்ட் பேலஸ் (பிஎல்ஆா்)’ மற்றும் ‘ஸ்ரீ வாசவி கோல்ட்’ ஆகிய நிறுவனங்களுக்கு சௌகாா்பேட்டையில் உள்ள ‘சென்னை காா்கோ’ என்ற கொரியா் மற்றும் பாா்சல் நிறுவனம் மூலம் அனுப்பினாா்.
ஆனால், மறுநாள் சென்றடைய வேண்டிய ரூ.90 லட்சம் மதிப்பு நகைகள் உரியவா்களிடம் சேரவில்லை. இதுகுறித்து பா்வீன் குமாா் சைனி, கொரியா் நிறுவன மேலாளா் ரஞ்சித் குமாரிடம் கேட்டபோது, அவா் முறையாக பதிலளிக்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பா்வீன் குமாா் சைனி இது தொடா்பாக சென்னை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், யானைக் கவுனி போலீஸாா் பாா்சல் சா்வீஸ் நிறுவன மேலாளா் ரஞ்சித் குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.