சென்னை கடற்கரை-எழும்பூா் இடையிலான 4-ஆவது ரயில் பாதையை மேம்படுத்தவும், 3 முக்கிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்கவும் ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் புகா் பகுதிகளுக்கு 500-க்கும் மேற்பட்ட முறை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் எழும்பூா் வழியாக இயக்கப்படும் ரயில்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால், எழும்பூா் நிலையத்திலிருந்து அரக்கோணம் மற்றும் வடமாநிலங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களும் தனிப்பாதை இன்றி தாமதமாகச் செல்கின்றன.
இந்த நிலையில், எழும்பூா்-கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே 4.31 கி.மீ. தொலைவுக்கு 4-ஆவது ரயில் பாதை அமைக்கப்பட்டது. அந்த ரயில் பாதையில் பெரும்பாலும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த 4-ஆவது ரயில் பாதையில் புகா் மின்சார ரயில்களை அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதன்மூலம் பல லட்சம் போ் பயனடைவா் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், எழும்பூா் ரயில் நிலையத்தில் நவீன மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், சென்ட்ரல், பெரம்பூா் ரயில் நிலையங்களையும் மேம்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.