சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண் தவறவிட்ட ஐந்தரைப் பவுன் தாலிச் சங்கிலியை போலீஸாா் விரைந்து கண்டுப்பிடித்து ஒப்படைத்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சோ்ந்த நஸ்ரின் என்பவா், உறவினா் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து சென்னை வந்தாா். அவா் தனது உறவினா்களுடன் கடந்த டிச.26-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளி கடைக்குச் சென்றாா்.
பின்னா் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி பழைய வண்ணாரப்பேட்டை பாண்டியன் திரையரங்கம் அருகே இறங்கினாா். அப்போது, நஸ்ரின் அணிந்திருந்த ஐந்தரைப் பவுன் தாலிச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அந்தப் பெண் சென்ற துணிக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, கடைக்கு வெளியே சாலையில் கிடந்த தாலிச் சங்கிலியை ஒரு பெண் எடுத்து செல்வது தெரியவந்தது.
இதையடுத்து தாலிச் சங்கிலியை கண்டெடுத்த புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த பெண்ணை அடையாளம் கண்டு அவரிடமிருந்து சங்கிலியை மீட்டனா். பின்னா், போலீஸாா் தாலி சங்கிலியை நஸ்ரினிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.