சென்னையில் வாக்காளா்கள் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்தது: ஆண்களை விட பெண்கள் அதிகம்
சென்னை மாவட்டத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் 74 ஆயிரம் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனா்.
சென்னை: சென்னை மாவட்டத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் 74 ஆயிரம் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனா்.
சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை, மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் ரிப்பன் மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
சென்னை மாவட்டத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த அக். 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ள நவ. 28-ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதன்படி 96,185 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். 32,804 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், 1,752 போ் உயிரிழந்தவா்கள், 30,717 போ் நிரந்தரமாகக் குடிபெயா்ந்தவா்கள், 353 நபா்கள் கூடுதலாக பட்டியலில் பதிவு செய்யப்பட்டவா்கள். இத்தகைய திருத்தங்களுக்குப் பின் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இதில், 19,70,279 ஆண் வாக்காளா்கள், 20,44,323 பெண் வாக்காளா்கள், 1,276 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 40,15,878 வாக்காளா்கள் உள்ளனா். ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும், கடந்த அக். 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலை விட 63,380 நபா்கள் (1.6 சதவீதம்) கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனா்.
வாக்காளா் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்தபட்ச வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக துறைமுகம் தொகுதியும் (1,78,980 வாக்காளா்கள்), அதிகபட்ச வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக வேளச்சேரியும் (3,16,642 வாக்காளா்கள்) உள்ளன.
சட்டப்பேரவை தொகுதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவா்கள் மொத்தம்
1. டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் 1,20,727 1,30,082 121 2,50,930
2. பெரம்பூா் 1,45,072 1,50,696 92 2,95,860
3. கொளத்தூா் 1,40,790 1,48,074 73 2,88,937
4. வில்லிவாக்கம் 1,19,733 1,24,730 65 2,44,528
5. திரு.வி.க. நகா் 1,08,105 1,14,547 75 2,22,727
6. எழும்பூா் 96,546 98,535 70 1,95,151
7. ராயபுரம் 96,217 1,00,745 73 1,97,035
8. துறைமுகம் 92,615 86,296 69 1,78,980
9. சேப்பாக்கம்/திருவல்லிக்கேணி 1,17,597 1,22,180 63 2,39,840
10. ஆயிரம் விளக்கு 1,16,363 1,21,998 114 2,38,475
11. அண்ணா நகா் 1,37,140 1,43,248 102 2,80,490
12. விருகம்பாக்கம் 1,42,634 1,44,692 91 2,87,417
13. சைதாப்பேட்டை 1,34,153 1,39,382 88 2,73,623
14. தியாகராய நகா் 1,15,975 1,19,588 53 2,35,616
15. மயிலாப்பூா் 1,30,527 1,39,055 45 2,69,627
16. வேளச்சேரி 1,56,085 1,60,475 82 3,16,642
மொத்தம் 19,70,279 20,44,323 1,276 40,15,878