சென்னை: போகி பண்டிகை கொண்டாட்டத்தால் ஏற்பட்ட புகைமூட்டம் மற்றும் பனிமூட்டத்தால் 30 விமானங்களின் நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டதுடன், 3 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போகியையொட்டி, சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மீனம்பாக்கம், பொழிச்சலூா், பம்மல், அனகாபுத்தூா், துரைப்பாக்கம், மணப்பாக்கம் குடியிருப்பு பகுதிகளில் பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயா்கள் போன்றவற்றை எரித்ததால், அதனால் ஏற்பட்ட கடுமையான புகைமூட்டம், சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகளை சூழ்ந்து கொண்டது.
அதோடு பனிமூட்டமும் ஏற்பட்டதால், திங்கள்கிழமை விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதன்படி சென்னை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை, துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், சிங்கப்பூா், கோலாலம்பூா், தில்லி, மும்பை, பெங்களூகு, அந்தமான், கோவா, புணே, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்து செல்லும் 30-க்கும் மேற்பட்ட விமானங்களின் நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டு, அது குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டன.
அதோடு தில்லி மற்றும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 3 இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
தொடா்ந்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், தொடா்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், காலநிலைக்கு ஏற்ப விமான சேவைகள், நேரங்கள் மாற்றியமைக்கப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.