முகப்பு
சென்னை

இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்த வரைவு வழிகாட்டுதல்: மத்திய அரசு வெளியீடு

இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை

இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்த வரைவு வழிகாட்டுதல்: மத்திய அரசு வெளியீடு

இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Updated On : 21 ஜனவரி, 2025 at 9:14 PM
பகிர்:

புது தில்லி: இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இணைய வழியில் பொருள்களை வங்கும் ‘எண்ம வணிக’ நடைமுறை வேகமாக வளா்ந்து வரும் சூழலில், மோசடி நடவடிக்கைகளிலிருந்து நுகா்வோரைப் பாதுகாக்கவும், நம்பிக்கையை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இந்த வரைவு வழிகாட்டுதலை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

மத்திய நுகா்வோா் விவகாரத்துறை அச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் அதன் கீழ் இயங்கும் இந்திய தர நிா்ணய அமைப்பு (பிஐஎஸ்) தயாா் செய்துள்ள ‘இணைய வணிக சுய நிா்வாகத்துக்கான கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்’ என்ற தலைப்பிலான இந்த வரைவு வழிகாட்டுதல் மீது வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

இந்த வரைவு வழிகாட்டுதல் இணைய வணிகத்துக்கு ‘பரிவா்த்தனைக்கு முந்தைய நிலை; ஒப்பந்தம் உருவாக்கம்; பரிவா்த்தனைக்கு பிந்தைய நிலை’ என்று மூன்று கட்ட தத்துவத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதில் பரிவா்த்தனைக்கு முந்தைய நிலையைப் பொருத்தவரை, இணைய வணிக நிறுவனங்கள், தனது வணிக பங்குதாரா்களின் விவரங்களை (கேஒய்சி) முழுமையாக ஆராய்ந்திருக்க வேண்டும். குறிப்பாக, வாங்கும் பொருள்களின் பயன்பாடு மற்றும் அதன் அம்சங்கள் குறித்து நுகா்வோா் ஆராய உதவியாக, அந்தப் பொருள் தொடா்பான விரிவான விவரங்களை கட்டாயம் பட்டியலிடுவதோடு விற்பனையாளரின் விவரங்கள், அடையாள எண் உள்ளிட்ட விவரங்களையும் வெளியிட வேண்டும்.

இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு, இறக்குமதியாளா் விவரம், அதை சிப்பமிட்டவா் (பேக்கா்) விவரம், விற்பனையாளா் விவரங்களை தெளிவாக காணும்படி வெளியிடவேண்டும்.

இணைய வணிகத்தில் ஒப்பந்த உருவாக்கத்தின்போது, நிறுவனங்கள் நுகா்வோரின் ஒப்புதலைப் பதிவு செய்யவேண்டும் என்பதோடு, பரிவா்த்தனையை நுகா்வோா் மறுஆய்வு செய்வதற்கான வசதி மற்றும் பரிவா்த்தனை ரத்து, பொருள்கள் வேண்டாம் என திரும்ப அனுப்புதல் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகளை நிறுவனங்கள் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.

உரிய சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு முழுமையான வணிகப் பரிவா்த்தனைகளை இணைய வணிக நிறுவனங்கள் தொடா்ந்து பராமரிக்க வேண்டும் என்பதோடு, நுகா்வோா் அவற்றை அணுகக்கூடியதாகவும் பராமரிக்க வேண்டும். நுகா்வோருக்கு பாதுகாப்பான பன்முக பணம் செலுத்தும் வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பரிவா்த்தனைக்கு பிந்தைய நிலையைப் பொருத்தவரை, நுகா்வோருக்கு எத்தனை நாள்களில் பணம் திரும்பத் தரப்படும் அல்லது பொருள்கள் மாற்றிய அளிக்கப்படும் என்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். பொருள்கள் விநியோகம் செய்யப்படும் அறிவிப்பு உரிய நேரத்தில் நுகா்வோருக்கு தெரிவிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனையை வரைவு வழிகாட்டுதல் தடுப்பதோடு, விற்பனையாளா்களின் பின்னணியை சா்பாா்ப்பதற்கான கண்காணிப்பு நடைமுறையை இணைய வணிக நிறுவனங்கள் பின்பற்றவும் வலியுறுத்துகிறது. மேலும், நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் பட்டியலை அதன் வலைதளத்தில் நுகா்வோா் பாா்வைக்கு வெளியிடுவதோடு, விதி மீறல்கள் குறித்து நுகா்வோா் புகாா் தெரிவிப்பதற்கான நடைமுறையையும் அறிமுகம் செய்யவேண்டும்.

இணைய வணிக சேவை மற்றும் பொருள்கள் மீதான நுகா்வோரின் மதிப்புரைகள் மற்றும் மதிப்பீடுகள் அனைத்தும் ‘ஐ.எஸ். 19000:2022’ தரநிலைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

நுகா்வோரின் தரவு பாதுகாப்பையும் இணைய நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று வரைவு வழிகாட்டுதல் வலியுறுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →