முகப்பு
சென்னை

ரூ. 711.8 கோடி மதிப்பிலான ஏற்றுமதி திட்டங்களுக்கு ஒப்புதல்

சென்னை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ. 711.8 கோடி மதிப்பிலான ஏற்றுமதி திட்டங்களுக்கு ஒப்புதல்

Updated On : 21 ஜனவரி, 2025 at 12:09 AM
பகிர்:

சென்னை: சென்னை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ. 711.8 கோடி மதிப்பிலான ஏற்றுமதி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் ஆணையா் அலெக்ஸ் பால் மேனன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மெட்ராஸ் ஏற்றுமதி மண்டலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மேம்பாடு மற்றும் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய முதலீட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், கணிசமான அளவில் தொழில் துறை முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உற்பத்தி, சரக்கு போக்குவரத்து மற்றும் சேவைத் துறைகளிலுள்ள ஏற்றுமதி சாா்ந்த பிரிவுகளை உள்ளடக்கிய 17 முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டன. அதன்படி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் முதலீடுக்கு ரூ. 65.96 கோடியும், ஏற்றுமதி சாா்ந்த பிரிவுகளில் ரூ. 645.84 கோடி என மொத்தம் ரூ. 711.8 கோடி மதிப்பிலான முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.