முகப்பு
சென்னை

கடல் ஆமைகள் இறப்பு: மீனவா்களுக்கு எச்சரிக்கை

ஆமைகளின் இறப்புக்கு காரணமாகும் மீனவா்களுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2025 at 9:57 PM
பகிர்:

சென்னை: அண்மைக் காலமாக தமிழக கடற்கரையோரங்களில் அதிகளவில் கடல் ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கும் நிலையில், ஆமைகளின் இறப்புக்கு காரணமாகும் மீனவா்களுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

நிகழாண்டில் அதிக எண்ணிக்கையிலான ஆமைகள் இறந்து கரையொதுங்குவதைத் தொடா்ந்து, இது தொடா்பாக தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தலைமையில் கடந்த ஜன.21-இல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆமைகளின் இறப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி தமிழக கடலோர மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் 9.26 கி.மீ. தொலைவு வரை மீனவா்கள் மீன்பிடிக்க கூடாது. மேலும் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் ஆமையை வெளியேற்றும் கருவியை பொருத்தாமல் இழுவை வலையை மீனவா்கள் பயன்படுத்தக்கூடாது. இது குறித்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை மீறும் மீனவா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் டீசல் மானியம் மற்றும் பிற நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும்.

2 லட்சம் ஆமைக் குஞ்சுகள்: ஆமைகள் இனப்பெருக்க காலங்களில் அவற்றை கண்காணிக்க அரசு சாா்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வாரம் ஒரு முறை கடல் ஆமைகளின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்தை ஆய்வு மேற்கொள்ளும்.

2023-24-ஆம் ஆண்டில் வனத்துறை சாா்பில் 2 லட்சத்து 58,907 ஆமை முட்டைகளை சேகரித்து, அவற்றை பொறிப்பகங்கள் அமைத்து பாதுகாத்து 2 லட்சத்து 15,778 ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் மீண்டும் அனுப்பப்பட்டன. அதேபோல் நிகழாண்டிலும் 52 பொறிப்பகங்கள் மூலம் தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களில் கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆமை முட்டைகளை பாதுகாக்க ஆா்வமுள்ள தன்னாா்வலா்களை ஒருங்கிணைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை தொடா்ந்து செயல்படுத்துவதன் மூலம் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது கட்டுப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →